இந்திய உள்நாட்டில் மிகப்பெரிய டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் 2024-25ஆம் ஆண்டுக்கான சீசனில் விதர்பா அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.
இந்த முறை ரஞ்சி டிராபி இறுதிபோட்டிக்கு கேரளா மற்றும் விதர்பா அணிகள் தகுதி பெற்று மோதிக்கொண்டன. இதில் முதலில் தாசில் வெற்றி பெற்ற கேரளா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணிக்கு டேனிஸ் மலேவர் 153 ரன்கள் குவிக்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிசை விளையாடிய கேரள அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சச்சின் பேபி 98 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். கேரள அணி போராடி இறுதியாக 342 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக முதல் இன்னிங்ஸ் முன்னிலையை கேரள அணி தவறவிட்டது. இது அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பையும் பறித்துவிட்டது.
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணிக்கு இந்த முறை கருண் நாயர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 135 ரன்கள் எடுத்தார். இன்று போட்டியின் கடைசி நாளான ஐந்தாவது நாளில் மதியத்திற்கு மேல் விதர்பா அணி 9 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்திருந்த பொழுது போட்டியை இரு அணிகளும் சம்மதித்து டிராவில் முடித்துக் கொண்டன.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று இருந்த காரணத்தினால் விதர்பா அணி இறுதிப் போட்டியில் கேரள அணியை தாண்டி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த முறை மும்பை அணிக்கு எதிராக இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட விதர்பா அணி இந்த முறை கேரள அணிக்கு எதிராக வென்றது. மேலும் விதிர்பா அணியை சேர்ந்த இடதுகை ஸ்பின்னர் ஹர்ஸ் துபே மொத்தம் 476 ரன்கள், 69 விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்றார்.
இதையும் படிங்க : ராகுல் டிராவிட்டுக்கு காயம்.. மகனுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய போது ஏற்பட்ட சோகம்.. என்ன நடந்தது?
கேரள மாநில அணி தனது ரஞ்சி டிராபி வரலாற்றில் 68 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிக அருகில் கேரள அணி இருந்தது. ஆனால் முதல் இன்னிங்ஸ் முன்னிலையை மிக சொற்ப ரன்னில் இழந்த காரணத்தினால் சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்துவிட்டது.