அஸ்வின் உணர்வை புரிந்துகொள்கிறேன்; உள்ளே எவ்வளவு உடைந்திருப்பார் என பேட்டியை பார்த்து புரிந்துகொண்டேன் – முன்னாள் இந்திய வீரர் ஆதரவு!

0
10057

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இடம்பெறாதது குறித்து அஸ்வின் பேசியதை பார்த்து, அவர் எவ்வளவு மனம் உடைந்திருப்பார் என்பதை புரிந்து கொள்கிறேன் என பேட்டி அளித்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை தவறவிட்டது. இந்த தோல்விக்கு ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு காரணம் என்று கடுமையாகவும் விமர்சிக்கப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் டாஸ் வென்று பவுலிங் எடுத்த முடிவில் இருந்து, நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் அஸ்வின் பிளேயிங் லெவனில் எடுக்காதது, அத்துடன் முதல் இன்னிங்சில் பவுலர்களை சரியாக பயன்படுத்தாதது என பல்வேறு வகையில் விமர்சிக்கப்பட்டு வருகிறார் ரோகித் சர்மா.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தோல்வியை தழுவிய பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து அளித்த பேட்டியில், “கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி இந்த இடத்திற்கு வருவதற்கு நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நான் ஏன் எடுக்கப்படவில்லை என்பது குறித்து பேசுவதற்கு இது சரியான தருணம் இல்லை. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தோல்வியை தழுவிய பிறகு நாம் இங்கே இருக்கிறோம். இந்த இடத்திற்கு வருவதற்கு நானும் விரும்பினேன். பைனலில் விளையாட வேண்டும் என்றும் நினைத்தேன். அது நடக்கவில்லை என்பது மனதளவில் வருத்தமாக இருந்தது.

கடந்த முறை இங்கிலாந்துக்கு வரும்பொழுது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் சென்றனர். அதன் அடிப்படையில் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனாலும் 2018ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளின் மைதானங்களில் என்னுடைய ரெக்கார்ட் நன்றாகவே இருந்திருக்கிறது.

- Advertisement -

கடந்த முறை இங்கிலாந்தில் நடந்த பைனலில் விளையாடியபோதும், நான் இரண்டு இன்னிங்சில் சேர்த்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினேன். இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, அணிக்கு எது தேவை என்பதை கேப்டன் முடிவெடுப்பார். அந்த வகையில் எடுத்திருக்கிறார்.” எனவும் அஸ்வின் பேசினார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில், “அஸ்வின் பேட்டியில் ஒரு உணர்வு தெரிகிறது. எந்த அளவிற்கு மனம் உடைந்து இருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அவரை புறக்கணிக்கும் பட்சத்தில் எந்த அளவிற்கு மனம் உடைந்திருந்தால் இப்படி பேசியிருப்பார்.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் டெஸ்ட் போட்டிகளில் அவர் அதிக விக்கெட் கைப்பற்றியவராக இருக்கிறார். எந்த வகையில் பார்த்தாலும் அவரை வெளியில் அமர்த்தியது சரியான முடிவு அல்ல. இருப்பினும் இதற்கு அவர் நேர்த்தியாக ரியாக்ட் செய்திருப்பது அவர் மீது எனக்கு அதீத மரியாதையை கொடுத்திருக்கிறது.” எனவும் பேசினார்.