சவுரவ் கங்குலி ஆட்டமிழந்ததற்கு தேம்பி தேம்பி அழுதான் – வெங்கடேஷ் ஐயர் பற்றி அவர் தந்தை கூறியது

0
146
Venkatesh Iyer

இந்த வருட ஐபிஎல் தொடர் பார்த்த அனைவருக்கும் இவரை தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஓபனிங் வீரராக களமிறங்கி தன்னுடைய முதல் ஐபிஎல் தொடரிலேயே சக்கை போடு போட்டு உள்ளார். மத்திய பிரதேசத்தில் தமிழ் பேசக்கூடிய குடும்பத்திற்கு மகனாக டிசம்பர் மாதம் 25ஆம் தேதி 1994ஆம் ஆண்டு வெங்கடேஷ் பிறந்தார்.

அடிப்படையில் வெங்கடேஷ் ஒரு நல்ல கல்வியாளர். சி ஏ பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், பொருளாதாரப் பிரிவில் எம்பிஏ பிரிவை இவர் ஒரு கட்டத்தில் தேர்ந்தெடுத்தார். 2018 ஆம் ஆண்டு ஒரு நல்ல வேலை வாய்ப்பு இவருக்கு கிடைத்த போதிலும் இரஞ்சி டிராபி விளையாடுவதற்காக அந்த வேலையை இவர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மிகப் பெரிய பக்கபலமாக இவருடைய தாயார் இருந்திருக்கிறார். கிரிக்கெட் விளையாட நிறைய ஊக்கம் கொடுத்து தொடர்ந்து இவருக்கு உறுதுணையாக இவருடைய தாயார் இன்று வரை இருந்து வருகிறார்.

வெங்கடேஷ் ஐயரின் கிரிக்கெட் கேரியர்

2015ஆம் ஆண்டு தன்னுடைய முதல் டி20 போட்டி ரயில்வே கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். அதனுடைய முதல் லிஸ்ட் ஏ போட்டியை சௌராஷ்ட்ரா கிரிக்கெட் அணிக்காக டிசம்பர் மாதம் அந்த ஆண்டு விளையாடினார். 2012ஆம் ஆண்டு தன்னுடைய முதல் இரஞ்சி டிராபி தொடரை இவர் விளையாடத் தொடங்கினார். உள்ளூர் போட்டிகள் அனைத்திலும் மிக அற்புதமாக விளையாடி வந்த இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு ஏலத்தில் வாங்கியது.

வெங்கடேஷ் தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியை பெங்களூரு அணிக்கு எதிராக கடந்த மாதம் விளையாடினார். தன்னுடைய முதல் அரை சதத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இவர் பதிவு செய்தார். ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் 4 அரை சதங்கள் உட்பட 370 ரன்களை வெங்கடேஷ் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 128.47 மற்றும் பேட்டிங் ஆவெரேஜ் 41.11. பவுலிங்கிலும் ஐபிஎல் தொடரில் மூன்று விக்கெட்டுகளை வெங்கடேஷ் ஐயர் இதுவரை கைப்பற்றியுள்ளார்.

அவர் ஒரு தீவிரமான சௌரவ் கங்குலி ரசிகர்

சமீபத்தில் பேசிய வெங்கடேஷ் ஐயரின் தந்தை அவருடைய சிறுவயது நினைவுகளை நமக்கு எடுத்துக் கூறினார். ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரராக தற்போது ஜொலித்து வரும் வெங்கடேஷ் ஐயர் மிகப்பெரிய சவுரவ் கங்குலி ரசிகர். ஒரு முறை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போட்டியில் மிக சீக்கிரமாக கங்குலி அவுட் ஆகினார். அவர் ஆட்டமிழந்து அடுத்த நொடியே வெங்கடேச ஐயர் அழத் ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமின்றி அந்த நாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அடுத்த இரண்டு நாட்களுக்கு வெங்கடேஷ் சோகமாக காணப்பட்டார் என்று கூறினார்.

ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடிய இவரை பிசிசிஐ நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் நெட் வீரராக தேர்ந்தெடுத்துள்ளது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி முடிந்தவுடன், வெங்கடேஷ் மற்றும் விராட் கோலி இருவரும் நிறைய விஷயங்களை பரிமாறிக் கொண்டனர். அப்பொழுது விராட் கோலி தன்னிடம், “உடற்பயிற்சி குறித்து பல விஷயங்களைத் என்னிடம் கூறினார். ஒரு கிரிக்கெட் வீரருக்கு உடற்தகுதி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அன்று நான் அவரிடம் தெரிந்து கொண்டேன். மேலும் நெருக்கடியான சூழ்நிலைகளில் எப்படி போட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்தும் அவர் எனக்கு விளக்கிக் கூறினார்” என்று ஐயர் கூறியுள்ளார்.