நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான முறையில் பந்துவீசி இருக்கிறார்கள். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருக்கிறது.
இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்தரா அதிரடியான தொடக்கம் தர அந்த அணி முதல் 10 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் வரும் சக்கரவர்த்தி போட்டியின் எட்டாவது ஓவரில் வில் எங் விக்கெட்டை கைப்பற்றி முதல் திருப்புமுனையை இந்திய அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக டேரில் மிட்சல் 101 பந்துகள் விளையாடி 61 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக மைக்கேல் பிரேஸ்வல் இறுதிவரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் 40 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இறுதியில் நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் சேர்த்தது.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக தொடர்ந்து ஒன்பது ஓவர்கள் பந்துவீசி ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 30 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு நியூசிலாந்து அணியை மடக்க பயன்பட்டது.
இதையும் படிங்க : ஷமி காய நேரத்தில்.. விராட் கோலி செஞ்ச சம்பவம்.. கேப்டன் ரோகித்துக்கு மாஸ் அட்வைஸ் – களத்தில் என்ன நடந்தது
இது வருண் சக்கரவர்த்திக்கு முதல் ஐசிசி தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணிக்கு நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக சாதித்திருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் குல்தீப் யாதவ் 7 விக்கெட், அக்சர் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.