சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணி தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
சாம்பியன் ட்ராபிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் மாயாஜால சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே அதிக சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை தேர்வு செய்தது ஏன் என இந்திய நிர்வாகத்திடம் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா அதற்கான விவரங்களை நீங்கள் போட்டியின் போது காண்பீர்கள் என்று கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் வருவனுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த போட்டியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி நியூசிலாந்து அணி தோல்வியை அடைய முக்கிய காரணமாக அமைந்தார். மொத்தமாக 10 ஓவர்கள் வீசிய வருண் 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தத் தொடரில் அறிமுகமான முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றதோடு அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் தனது இருப்பை பதிவு செய்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் வருண் தனது 26 வயதில்தான் கிரிக்கெட்டை தீவிரமாக எடுத்து விளையாட ஆரம்பித்ததாகவும் அதற்கு முன்னர் தான் ஒரு கட்டடக் கலைஞராக பணிபுரிந்ததாகவும் திரைப்பட தயாரிப்பாளராக வேண்டும் என சில சுவாரசியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:எதிர்பக்கத்தில் யார் வேணா இருக்கலாம்.. ஆனா இப்போ இந்திய அணிதான் ‘கிங்’ ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடும் கங்குலி
இதுகுறித்து அவர் கூறும் போது “அப்போ நான் கிரிக்கெட்டை ரொம்ப லேட்டாக ஆரம்பித்தேன். என் 26 வயதில் நான் இருந்தபோதுதான் கிரிக்கெட்டை தீவிரமாக எடுத்து விளையாட ஆரம்பித்தேன். அதற்கு முன்னர் எனக்குள் கட்டடக் கலைஞராக வேண்டும் மற்றும் திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. சினிமா எடுப்பதுதான் என் கனவு, அதனால் எனக்கு வேறு வேறு வாழ்க்கை பாதைகள் இருந்தது. இப்போது அது வேறு மாதிரியாக இருக்கிறது. 26 வயதில் கிரிக்கெட் குறித்த கனவு காண ஆரம்பித்தேன். இப்போது எல்லாம் நன்றாக நடக்கிறது” என்று பேசி இருக்கிறார்.