மாமா 35 வயதில் வளர்ந்து வரும் வீரர் ; மருமகன் 21 வயதில் தேசிய அணி வீரர்; என்னப்பா நடக்குது ஆப்கானிஸ்தான்ல?!

0
3988
Afghanistan

தற்பொழுது இலங்கையில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர் ஜூலை 13ஆம் தேதி ஆரம்பித்து ஜூலை 23ஆம் தேதி வரையில் மொத்தம் 15 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்படுகிறது.

இந்தத் தொடர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள அணிகளின் திறமை மிகுந்த இளம் வீரர்களை கண்டறிவதற்கான தொடராக இருப்பதற்காக நடத்தப்படுகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் ஆசியாவில் உள்ள எட்டு அணிகளின் ஏ அணிகள் பங்கு பெறுகின்றன. இந்த எட்டு அணிகளும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.

ஏ குழுவில் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு ஏ அணிகளும், பி குழுவில் இலங்கை, ஓமன், யுனைடெட் அரபு எமிரேட் மற்றும் நேபாள் ஆகிய அணிகளும் இடம் பெற்று இருக்கின்றன.

நேற்று ஏ குழுவில் இருந்து இந்தியா, பி குழுவில் இருந்து யுனைடெட் அரபு எமிரேட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இந்திய ஏ அணியின் கேப்டன் யாஸ் துல் அதிரடி சதத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது அதில் ஒரு போட்டியில் ஏ பிரிவு ஆப்கானிஸ்தான் மற்றும்
பி பிரிவு இலங்கை இரண்டு அணிகளும் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்தது.

இதில் ஆப்கானிஸ்தான் அணிக்காக மூன்றாவது வீரராக களம் இறங்கிய நூர் அலி முகமது சிறப்பாக விளையாடி 62 பந்தில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 53 ரன்கள் அணிக்கு எடுத்துக் கொடுத்தார்.

இதில் ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், வளர்ந்து வரும் ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டியில், 35 வயதான இவருக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக 50க்கும் மேற்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருக்கிறார். மேலும் டி20 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இதில் இன்னொரு வினோதமான விஷயம் என்னவென்றால் இவருக்கு மருமகன் முறையில் இருக்கும் 21 வயதான இப்ராஹிம் ஜட்ரன் ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்கு விளையாடுகிறார். ஆனால் இவரது மாமா இவரை விட 14 வயதில் பெரியவர் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியில் விளையாடுகிறார்.

தற்பொழுது இந்தச் செய்தி சமூக வலைதளத்தில் பலரால் நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகிறது. வெற்றியோ தோல்வியோ இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருவதின் மூலமாக அவர்களுக்கு அனுபவத்தை உண்டாக்க முடியும். ஆனால் இப்படி ஒரு முடிவை ஆப்கானிஸ்தான் எடுத்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்!