இந்திய அணிக்கு நான் தேர்வாகியப் பின் டேல் ஸ்டெய்ன் என்னிடம் கூறியது இதுதான் – உம்ரான் மாலிக்

0
93
Umran Malik and Dale Steyn

இயல்பு வாழ்க்கை என்பதே அரிதான ஒரு விசயமாக இருக்கும் ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வந்து, தன் தனித்திறனால் ஐ.பி.எல் தொடரில் சாதித்து, இன்று இந்திய கிரிக்கெட் தேசிய அணியிலும் இடம் பிடித்து அசத்தி இருக்கிறார் 22 வயதான இளைஞர் உம்ரான் மாலிக்!

உம்ரான் மாலிக்கின் தந்தை ஜம்மு-காஷ்மீரில் இன்றும் பழக்கடை நடத்தி வருகிறார். உம்ரான் மாலிக் சாதாரண பொருளாதார பின்புலத்தில் இருந்தே வந்தவர். அவரது பந்துவீச்சில் இருக்கும் தீ போன்ற வேகம்தான் அவரது இந்த வேகமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

- Advertisement -

கடந்த 2021 ஆம் ஐ.பி.எல் சீசன் இரண்டாம் பகுதி கோவிட்தொற்றால் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு மாற்றப்பட்ட பொழுது, ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த நடராஜன் கோவிட்டால் பாதிக்கப்பட்டார். அப்பொழுது ஹைதராபாத் அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்த உம்ரான் மாலிக் அதிர்ஷ்டவசமாக வாய்ப்பை பெற்றார். அந்த ஐ.பி.எல் தொடரில் இவர் மணிக்கு 150 கி.மீ வேகத்திற்கு மேல் தொடர்ந்து வீசுவது பலரது கவனத்தையும் ஈர்க்க, ஹைதராபாத் அணி இந்த ஆண்டு நான்கு கோடிக்கு இவரைத் தக்க வைத்தது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக, உலகின் தலைசிறந்த ஸ்விங் அன்ட் ஸீம் பாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெயின் வந்திருந்தார். இவரது பயிற்சியின் கீழ் உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு கூர்மையாகிக்கொண்டே இருந்தது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உம்ரான் மாலிக் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தின் முக்கியத் தலைகளின் பார்வை இவர் மேல் அழுத்தமாக விழுந்தது. இந்த தருணத்தில் இவரைவிட அதிகம் மகிழ்ச்சி அடைந்தவர் டேல் ஸ்டெயின்தான். இதற்கடுத்து தென்ஆப்பிரிக்கா அணியுடனான இருபது ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக் தேர்வானார்!

தற்போது டேல் ஸ்டெயின் பற்றி பேசியிருக்கும் உம்ரான் மாலிக் “இந்திய அணியில் என் பெயர் வந்தபொழுது, நாங்கள் போட்டியில் விளையாடுவதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எல்லோரும் என்னை வாழ்த்தினார்கள். என்னிடம் வந்த டேல் ஸ்டெயின் ஸார் ‘இந்திய அணியில் உனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் ஐ.பி.எல் தொடருக்கு முன்பே சொன்னேன் இல்லையா!’ என்று கூறினார். கடவுளின் அருளால் அதுதான் நடந்தது. இப்போது இந்திய அணிக்காக சிறந்ததை வழங்குவதே என் நோக்கம்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ராகுல் டிராவிட் ஸாரை சந்தித்து பேசியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் இந்த விளையாட்டின் ஜாம்பாவான். அவர் என்னிடம் நான் இப்பொழுது என்ன செய்கிறோனோ அதைத் தொடர்ந்து செய்யச் சொன்னார். பராஸ் ஸாரும் ஒவ்வொரு பந்தின் போதும் என்னைப் பின்னால் இருந்து சிறப்பாக வழிநடத்தினார். இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது” என்று தெரிவித்தார்!