நடராஜனுக்கு பதிலாக 21வயது இளம் வேகப்பந்து வீச்சாளரை அறிவித்த ஹைதராபாத் நிர்வாகம், வாய்ப்பைப் சரியாக பயன்படுத்திக் கொள்வாரா ?

0
1403
Thangarasu Natarajan

தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதாப நிலையில் உள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளிலும் கட்டாயமாக வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை அந்த அணி எதிர்பார்க்கலாம்.

ஐதராபாத் அணியின் ஆஸ்தான பந்துவீச்சாளர் நடராஜனுக்கு நேற்று முன்தினம் கொரோனோ தொற்று உறுதியானது தெரியவந்தது. இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக 21 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

மீண்டும் ஒரு சோதனையில் சிக்கிக்கொண்ட நடராஜன்

இந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இரண்டு போட்டியில் மட்டுமே விளையாடினார். அந்த இரண்டு போட்டியில் அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவ குழு ஆலோசனை வழங்கிய காரணத்தினால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு, சில மாதம் நடராஜன் ஓய்வில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஓய்வில் இருந்து மீண்டு வந்து இரண்டாம் பாதியில் அவர் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவருக்கு கொரோனோ இருந்தது தெரியவந்தது. அவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட ஆறு நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

உம்ரன் மாலிக்குக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது வலதுகை மீடியம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரன் மாலிக் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நெட் பவுலராக இருந்து வந்தார். நடராஜன் மீண்டும் ஐதராபாத் அணியில் கலந்து கொள்ளும் வரையில், அவருக்கு மாற்று வீரராக தற்பொழுது உம்ரன் மாலிக் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் விதிமுறைப்படி ஒரு அணியில் உள்ள சீனியர் வீரர் உடல்நலம் மற்றும் வேறு ஏதேனும் ஒரு காரணமாக பயோ பப்புள்ளை விட்டு வெளியேறும் பட்சத்தில், அவருக்கு மாற்று வீரராக அணியில் இருக்கும் ரிசர்வ் வீரரை விளையாட வைக்கலாம். அதனடிப்படையில் இனி வரும் போட்டிகளில் நடராஜனுக்கு பதிலாக உம்ரன் மாலிக் விளையாடுவார். உம்ரன் மாலிக் இதுவரை ஒரு டி20 போட்டி மற்றும் ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் விளையாடி மொத்தமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்று வீரராக ஷேர்பேன் ரூதர்போர்ட் தேர்வாகி இருந்தது நம் அனைவருக்கும் தெரியும். நேற்று அவரது தந்தை இயற்கை எய்திய காரணத்தினால், அவர் தற்பொழுது ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இந்த ஆண்டு நடந்த கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த அணிக்காக ரூதர்போர்டு மூன்று அரை சதங்கள் உட்பட மொத்தமாக 262 ரன்களை 127.18 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் அடித்து அசத்தினார்.

- Advertisement -

நடராஜன் மற்றும் ஷேர்பேன் ரூதர்போர்ட் என அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் ஹைதராபாத் அணியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வென்றே ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையில், ஹைதராபாத் அணி மிகப் பெரிய சோதனைக்கு ஆளாகியுள்ளது அந்த அணி ரசிகர்களை தற்பொழுது வருத்தமடையச் செய்துள்ளது.