தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டிராவிஸ் ஹெட் அதிரடியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணியின் இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருக்க மூன்றாவது டி20 போட்டி மழையின் காரணமாக நடைபெறாததால் தொடர் சமநிலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
பென் டக்கெட் அதிரடி
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் ஒரு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 17 ரன்கள் எடுக்க, இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பெண் டக்கெட் அதிரடியாக விளையாடி 91 பந்துகளில் 11 பவுண்டரிகள் உடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் வந்த வில் ஜேக்ஸ் 56 பந்தில் 62 ரன்கள், கேப்டன் ஹாரி புரூக் 31 பந்தில் 39 ரன்கள், ஜெமி ஸ்மித் 19 பந்தில் 23 ரன்கள், ஜேக்கப் பெத்தேல் 34 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்கள். 49.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 315 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா மற்றும் லபுசேன் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
டிராவிஸ் ஹெட் காட்டடி
இது தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் மிட்சல் மார்ஸ் 14 பந்தில் 10 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 28 பந்தில் 32 ரன்கள், கேமரூன் கிரீன் 32 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் லபுசேன் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள்.
இதையும் படிங்க: இப்பவும் இந்திய அணிக்கு எங்களால பிரஷர் போட முடியும்.. இத செஞ்சா போதும்.. கதை முடியும் – ஹஸன் மக்முத் பேச்சு
இந்த ஜோடியை கடைசிவரையில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 129 பந்துகளில் 20 பௌண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 154 ரன்கள், லபுசேன் 61 பந்தில் ஏழு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 77 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கட்டுகளை மட்டும் இழந்து 44 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிராபிஸ் ஹெட் அசுரத்தனமான பேட்டிங் ஃபார்ம் தொடர்கிறது. மேலும் அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்