இனிமே 3 பார்மட்டில் என்னால் ஆடமுடியாது. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று பேசியுள்ளார் ரோகித் சர்மா.
இலங்கை அணியுடன் நடைபெற்ற டி20 தொடரை கைப்பற்றிய பிறகு, இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.
டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார். டி20 போட்டிகளில் இனி சீனியர் வீரர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
அடுத்து வரவிருக்கும் நியூசிலாந்து அணியுடனான தொடரிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு இடமில்லை என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒருநாள் தொடருக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ரோகித் சர்மாவிடம், டி20 அணியில் உங்களுக்கு இடம் இல்லை, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறப்பட்டுள்ளது, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய ரோகித் சர்மா கூறுகையில்,
“இதற்கு முன்னரும் நான் பேசி இருக்கிறேன் இப்போதும் கூறுகிறேன். இந்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை வரவுள்ளது. அதில் தான் எங்கள் கவனம் இருக்கும். இந்த உலகக்கோப்பைக்காக சில வீரர்கள் நல்ல மனநிலையுடன் இருக்க போதிய ஓய்வு தேவைப்படுகிறது. சர்வதேச போட்டிகள் ஒன்றின் பின் மற்றொன்றாக இடைவிடாமல் நடந்து வருகிறது. அனைத்து வீரர்களாலும் பணிச்சுமையை பொறுத்துக் கொண்டு விளையாட முடியாது என்பதால் சிலருக்கு வேலைப்பளுவை குறைக்க ஓய்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. நானும் அந்த சில வீரர்களுக்குள் வருவேன்.
ஐபிஎல் தொடர் முடிவுற்ற பிறகு டி20 போட்டிகளின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படும். அப்போது எனது மனநிலையை பொறுத்து நான் முடிவெடுப்பேன். மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன். இந்த வருடம் உலகக்கோப்பை என்பது மிகவும் முக்கியம். ஆகையால் எங்களது முழு கவனமும் அதில் தான் இருக்கும்.” என்றார்.