நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் நடந்து கொண்ட விதம் பற்றி கேமரா முன்பு சொல்ல முடியாது என திலக் வர்மா கூறியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் திலக் வர்மா நெருக்கடியான நேரத்தில் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 53 பந்தில் 69 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இவருடைய பேட்டிங் இருந்தது.
குவியும் பாராட்டுகள்
இவருடைய புத்திசாலித்தனமான மற்றும் பதட்டம் இல்லாத நிதானமான இன்னிங்ஸ் பார்த்து இந்தியாவிலிருந்து பல முன்னாள் வீரர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் தற்போதைய இந்திய டி20 அணியில் இவருடைய இடம் இந்த போட்டிக்குப் பிறகு உறுதியாகி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
மேலும் இந்தியாவில் மட்டும் இல்லாமல் பாகிஸ்தானில் இருந்து முகமது அமீர் இவரது பேட்டிங்கை மிகவும் பாராட்டியிருக்கிறார். மேலும் திலக் வர்மாவை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் எந்த மாதிரி ஷாட் ஆட வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறி இருக்கிறார்.
கேமரா முன்னால் சொல்ல முடியாது
இந்தத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது போட்டியில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் இந்திய வீரர்களை மிகக் கடுமையாக சீண்ட ஆரம்பித்தார்கள். இதில் அபிஷேக் ஷர்மா பேட் மற்றும் வாயால் இரண்டிலுமே சரியான பதில் அளித்தார். இந்த நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து திலக் வர்மா பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : திலக் வர்மாவை பார்த்து.. எங்க பாகிஸ்தான் வீரர்கள் இத கத்துக்கோங்க – முகமது அமீர் விமர்சனம்
“பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் நிறைய செய்தார்கள். அதையெல்லாம் கேமரா முன்பு சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அது களத்தில் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே நடக்கக் கூடியது. ஆனாலும் இது விளையாட்டின் ஒரு பகுதி. அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் போட்டி விளையாடும் போது ஆரம்பிக்கிறது. அங்கு நாங்கள் வாயால் பதில் சொல்லக்கூடாது பேட்டால் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் அதைத்தான் செய்தோம்” என்று கூறி இருக்கிறார்.






