மெக்கலமின் டெஸ்ட் அதிவேக சத சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ள மூன்று வீரர்கள்!

0
2492
McCullam

டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தி ரசிகர்களை மைதானத்திற்கு அழைத்து வரும் விதமாக ஐசிசி எல்லா டெஸ்ட் மேட்ச்களுக்கும் முடிவு தெரிகின்ற வகையில் ஆடுகளத்தை அமைக்குமாறு டெஸ்ட் விளையாடும் நாடுகளை கேட்டுக் கொண்டு உள்ளது!

இதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைக்க பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆடுகளங்கள் முடிவு தெரிகின்ற வகையில் அமைக்கப்படுவதால், டெஸ்ட் போட்டியை அணிகள் அணுகுகின்ற விதமும் மாறி இருக்கிறது.

- Advertisement -

இப்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டை பழைய முறையில் மெதுவாக அணுக அணிகள் விரும்புவதில்லை. முடிந்தவரை வேகமாக விளையாடி ரன் சேர்க்கவே விரும்புகிறார்கள். இந்த அணுகு முறையில் தற்பொழுது இங்கிலாந்து மிக ஆக்ரோஷமாக டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகி விளையாடுகிறது. இந்தச் சிறிய கட்டுரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் மெக்கலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 54 பந்துகளில் அடித்த அதிவேக சதத்தை முறியடிக்க தற்காலத்தில் யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என்று பார்க்கப் போகிறோம்!

ரோகித் சர்மா இந்தியா:

ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை அடித்தவர், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ஒரு ஆட்டத்தில் 264 ரன்கள் குவித்தவர், மேலும் டி20 கிரிக்கெட்டில் 35 பந்துகளில் சதம் விளாசி குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்று ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்திற்குச் சான்றாக இந்தச் சாதனைகள் இருக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டை வெளிநாடுகளில் கொஞ்சம் நிதானமாகவும் உள்நாட்டில் வேகமாகவும் அணுகுவதை வழக்கமாக ரோகித் சர்மா வைத்திருக்கிறார். இவருக்கு சரியான ஆடுகளங்கள் கிடைக்கின்ற பொழுது, 50 பந்துகளில் டெஸ்ட் போட்டியில் இவரால் சதம் சுலபத்தில் அடிக்க முடியும்!

- Advertisement -

ஹாரி புரூக் இங்கிலாந்து:

எதிர்காலத்தில் உலக கிரிக்கெட்டில் நட்சத்திர வீரராக ஜொலிப்பதற்கான எல்லா முகாந்திரங்களும் தெரிகின்ற வீரர். தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி பின்பற்றி வரும் ஆக்ரோச அணுகுமுறைக்கு இவரது பேட்டிங் மிகப்பெரிய முறையில் வலு சேர்க்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை வெறும் ஒன்பது இன்னிங்ஸ் விளையாடி 809 ரன்களை 89.88 சராசரியில், 98.77 ஸ்ட்ரைக் ரேட்டில் நொறுக்கித் தள்ளி இருக்கிறார். கடந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று சதங்கள் விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார். தற்பொழுது நியூசிலாந்து நாட்டில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் அந்த அணிக்கு எதிராக 176 பந்துகளில் 186 ரன்கள் குவித்து மிரள வைத்திருக்கிறார். அதிவேக டெஸ்ட் சதத்தை அடிப்பதற்கான பிரகாசமான வாய்ப்பு இந்த இளம் வீரருக்கு இருக்கிறது!

ரிஷப் பண்ட் இந்தியா;

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோஷ அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு முன்னாலே, உலக டெஸ்ட் அணிகள் ஆக்ரோச அணுகுமுறையை தைரியமாக கையில் எடுப்பதற்கு முன்னாலே, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான பேட்டிங் பாணியை கொண்டவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்து ஆட்டம் இழக்கும் பந்துவரை ஒரே அணுகுமுறைதான். அது தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே இருப்பது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிட்னியில் இவர் அடித்த 97 ரன்கள், காபாவில் வெற்றிக்காக அடித்த ரன்கள் என்று உலகத்தில் எங்கு சென்றாலும் ஆட்டத்தை அதிரடியாக ரிஷப் பண்ட் அணுகுவதற்கு உதாரணங்கள் நிறைய உண்டு. எதிர்காலத்தில் குறைந்த பந்தில் டெஸ்ட் சதத்தை அடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கும் பிரகாசமாக உண்டு!