தமிழக வம்சாவளியை சேர்ந்த இவருக்கு பிளேயிங் லெவன்ல வாய்ப்பு கிடைப்பது கடினம் – உண்மையை போட்டு உடைத்த தினேஷ் கார்த்திக்!

0
361

அபிமன்யு ஈஸ்வரனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கடினம் என்று பேசியிருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

ரோகித் சர்மா காயம் காரணமாக வங்கதேசம் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சர்மா இடம் பெறமாட்டார் என தெரிய வந்துள்ளதால், கேப்டன் பொறுப்பில் களம் இறங்குகிறார் கேஎல் ராகுல். ரோகித் சர்மாவிற்கு மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அபிமன்யு ஈஸ்வரன், தற்போது பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது தந்தை டேராடூனில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி வைத்திருக்கிறார். கடந்த 5, 6 சீசன்களாக பெங்கால் அணிக்கு அசத்தி வரும் இவர் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா ஏ அணியிலும் விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடந்த இந்தியா ஏ மற்றும் வங்கதேசம் ஏ அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணிக்கு கேப்டனாகவும் இருந்து இரண்டு சதங்கள் அடித்தார். இதன் காரணமாக ரோகித் சர்மா இடத்திற்கு இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்.

இவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கடினம் என்று தன் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். அவர் கூறுகையில்,

- Advertisement -

“இந்திய அணிக்குள் சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இருக்கின்றனர். ஆகையால் அபிமன்யு ஈஸ்வரன் பிளேயிங் லெவனில் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. ஆனால் தனது தொடர்ச்சியான பங்களிப்பால் தற்போது இந்திய அணிக்குள் நுழைந்திருக்கிறார். தேர்வு குழுவினர் இவரை போன்ற வீரரை கண்டறிந்து இந்திய அணிக்குள் கொண்டு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பல வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியும் தேர்வுக்குழுவினரால் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றனர். தொடர்ச்சியான பங்களிப்பை கொடுத்த பிறகும் இந்திய அணிக்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் இம்முறை தேர்வு குழுவினர் இவரை கவனித்துள்ளார்கள்.

அபிமன்யு சிறுவயதாக இருக்கும் பொழுது அவரை நான் கவனித்து இருக்கிறேன். அதன் பிறகு அவருடன் விளையாடியுள்ளேன். பயிற்சி செய்து இருக்கிறேன். எனக்கு நன்கு தெரியும் மிகத் திறமையான வீரர்.” என்றார்.