“இந்திய கிரிக்கெட்டில் இது மட்டும் நடக்காமல் இருக்கனும்.. நம்ம கலாச்சாரம் கிடையாது!” – இர்பான் பதான் அதிரடி!

0
378
Irfan

இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டியில் பெங்களூர் மைதானத்தில் விளையாடுகிறது.

இதற்கடுத்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. சில நாட்களுக்கு முன்பு இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டன.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட இந்த மூன்று தொடர்களுக்கும் மூன்று கேப்டன்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். டி20க்கு சூரியகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டுக்கு கேஎல்.ராகுல், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா என மூன்று கேப்டன்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் எப்பொழுதும் ஒரே கேப்டன் ஒரே பயிற்சியாளர் என்பதுதான் இதுவரையிலான கிரிக்கெட் கலாச்சாரமாக இருந்து வந்திருக்கிறது. தற்பொழுது வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக இதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “இப்போது நடப்பவை எதிர்காலத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். ஆனால் நான் இதற்கு பெரிய ரசிகன் கிடையாது. ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு கேப்டனை வைப்பது தொடர்பாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இது வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக கொண்டுவரப்படுகிறது.

- Advertisement -

ரோஹித் சர்மாவுக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு தேவைப்படுவது புரிகிறது. ஆனால் வெவ்வேறு கிரிக்கெட் வடிவங்களுக்கு வெவ்வேறு கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என்பது நம் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் நடக்காமல் இருந்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

பொதுவாக இந்திய அணியில் 70 முதல் 80 சதவீத வீரர்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள். எதிர்காலத்திலும் இது தொடரும். இப்படி இருக்கும் பொழுது மூன்று அணிக்கும் ஒரே கேப்டன் ஒரே பயிற்சியாளர் இருப்பது மிகவும் நல்ல விஷயம்.

நம்மிடம் ஒரே வடிவத்தில் மட்டும் விளையாடக் கூடிய வீரர்களாக ரகான, புஜாரா போன்றவர்கள் மட்டுமே இருந்தார்கள். மற்றவர்கள் எல்லா வடிவங்களிலுமே விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!” என்று கூறியிருக்கிறார்!