“எங்கப்பவுக்கு நான் இந்த ஐபிஎல் டீம்ல ஆடனும்னு ஆசை, ஆனால் நான் கிரிக்கெட்டை வெறுக்க காரணமே அவர்தான்” – கண்ணீர் விட்ட பென் ஸ்டோக்ஸ்!

0
175

தனது தந்தையின் இழப்பு மனதளவில் எவ்வாறு பாதிப்பை கொடுத்தது என்று பென் ஸ்டோக்ஸ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வருபவர் பென் ஸ்டோக்ஸ். சமகால கிரிக்கெட்டில் சிறந்த ஆல்-ரவுண்டர்களுள் ஒருவர் என்று தயக்கம் இன்றி இவரை கூறலாம். 2021ஆம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் மனதளவில் பெரிதாக பாதிப்பிற்கு உள்ளாகினார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு மோசமான காலம் என்று அதை கூறலாம். ஐபிஎல் தொடரின் போது இவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

- Advertisement -

காயத்திலிருந்து மீண்டு வந்த ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ஒருநாள் அணியை பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது வழி நடத்தினார். 3-0 என்ற கணக்கில் அந்த தொடரை இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தார். ஜூலை மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகக்கூறி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி பென் ஸ்டோக்ஸ் இன் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த டாக்குமெண்டரி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. அதை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு தொலைக்காட்சிகளில் பென் ஸ்டோக்ஸ் பேட்டி அளித்து வருகிறார். ரசிகர்களின் கேள்விகளுக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்டோக்ஸ் தந்தை காலமானார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்ததால் தந்தையின் கடைசி காலத்தில் அவருடன் இல்லாமல் போனது மிகுந்த மனவேதனையை தந்ததாகவும் அவர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,

“கடைசியாக எனது தந்தையை நியூசிலாந்தில் இருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக நான் புறப்பட்டபோது பார்த்தேன். நான் அவருடன் இருப்பதற்கு விருப்பப்பட்டேன். ஆனால் எனது தந்தை என்னை வற்புறுத்தி அனுப்பி வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நான் விளையாடுவதை அவர் விரும்பினார். மேலும் எனக்கு அங்குள்ள ரசிகர்கள் ஆதரவு தருவதை நினைத்து சந்தோஷப்பட்டார். ஆனால் இதுதான் கிரிக்கெட் வாழ்க்கையை வெறுக்க காரணம்.

- Advertisement -

ஏனெனில் அவரது கடைசி காலத்தில் நான் அவருடன் இல்லாமல் போய்விட்டேன். “கிரிக்கெட்.. கிரிக்கெட்” என்று மட்டுமே நான் இருந்து விட்டேன். அவருக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்து நான் வித்தியாசமாக முடிவு செய்திருக்க வேண்டும்.” என்று மனம் வருத்தத்துடன் பேசினார்.

பென் ஸ்டோக்ஸ் இன் தந்தை மூளையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக இறந்தார். அவர் தனது கடைசி காலத்தில் மிகவும் சிரமப்பட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு கூட தான் அவருடன் இல்லை என்று பென் ஸ்டாக்ஸ் கண் கலங்கினார்.