இந்தப் பாகிஸ்தான் வீரர் ஐபிஎல் ஏலத்தில் இருந்திருந்தால் 15 கோடிக்குப் போயிருப்பார் – அஷ்வின் சுவாரசிய கருத்து!

0
179
Ashwin

பாகிஸ்தான் அணி முந்தைய மாதங்களில் இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்கு சுற்றுப்பயணம் செய்து இருந்தது, அப்போது பீல்டிங் செய்யும் பொழுது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால், அடுத்து நெதர்லாந்து மற்றும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 22 வயதான ஷகின் ஷா அப்ரிடி வெளியேறினார்.

அவர் காயம் அடைந்து இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் தொடர்ந்து அணியோடு இருந்து வருகிறார். 4 முதல் 6 வாரங்கள் ஓய்வு எடுக்க அவர் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார். எந்த நிலையில் அவர் எப்படியும் அடுத்து வருகின்ற டி20 உலக கோப்பையில் உடற்தகுதி பெறவேண்டுமென்று பாகிஸ்தான் மருத்துவ குழு அவரை தீவிரமாக பரிசோதித்து கண்காணித்து பாதுகாப்பில் வைத்து வருகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி நம்பிக்கை இழந்து முதல் சுற்றோடு தோற்று வெளியேறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இவர்தான். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இந்திய அணியின் நம்பிக்கையை உடைத்து தோல்வியைத் தந்தார்.

தற்பொழுது இவர் காயத்தில் இருந்தாலும் இவரைப் பற்றியான பேச்சுகள் ஓய்ந்தபாடு கிடையாது. பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனுஸ் இவர் இல்லாததால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நிம்மதி அடைந்து இருப்பார்கள் என்று ட்வீட் செய்து பெரிய பரபரப்பைக் கிளப்பினார். அதற்கு திருப்பி இர்பான் பதான் பதிலடி தந்தார். இப்படி இவர் விளையாடா விட்டாலும் இவரை வைத்து வெளியில் விஷயங்கள் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் இவரைக் குறித்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கும் ஆர் அஸ்வின் அவரது யூடியூப் சேனலில் சில முக்கிய கருத்துக்களை சுவராசியமாக பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால் ” கடந்த முறை நாங்கள் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட பொழுது சதாப் கான், ஹாரிஸ் ரவுப் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் ஷாகின் ஷா அப்ரிடியின் ஆரம்பக்கட்ட அதிரடி பந்து வீச்சு இந்திய அணியை தோல்வியடையச் செய்தது. தற்போது இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு கட்டாயம் பெரிய பின்னடைவுதான்” என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசி அஸ்வின் ” ஐபிஎல் ஏலத்தில் ஷாகின் ஷா அப்ரிடி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஆட்டத்தின் துவக்கத்தில் புதிய பந்தில் சுவிங் செய்து, இறுதி கட்ட ஓவர்களில் அட்டகாசமாக யார்க்கர்களை இறக்கும் அவர் எப்படியும் 14, 15 கோடிகளுக்கு ஏலம் போயிருப்பார். அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் மணிக்கு 140 முதல் 145 கிலோ மீட்டர் வரை வேகமாக பந்து வீசுகிறார்கள். எந்த ஒரு அணியும் இவ்வளவு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. பாகிஸ்தான் அணி எப்பொழுதுமே திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு பக்கமாகவே இருந்துவந்திருக்கிறது” என்று அஸ்வின் தெரிவித்தார்.