இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முடிவடைந்தது. முதல் முறையாக இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்கிற ஏக்கத்தில் அனைத்து இந்திய ரசிகர்களும் இருந்தனர். அதற்கு ஏற்றாற் போலவே இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றது.
இருப்பினும் இளம் வீரர்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, இறுதியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய ரசிகர்களின் கனவை சுக்கு நூறாக்கியது.
சர்ச்சைக்குரிய வகையில் நடந்த சம்பவம்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்க அணி இந்திய அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தபோது, ரவிச்சந்திரன் அஸ்வின் டீன் எல்கருக்கு எதிராக வீசிய பந்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முக்கியமான கட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் டீன் எல்கருக்கு பந்து வீசினார். அந்த பந்து எல்கரின் லோவர் கார்டில் பட்டது. உடனே் ஃபீல்டு நடுவர் எராஸ்மஸ் எல்பிடபிள்யூ முறைப்படி அவுட் கொடுத்தார். உடனேயே எல்கர் ரிவ்யூ எடுத்தார். மூன்றாம் நடுவர் ஹாக் ஐ டெக்னாலஜியை பயன்படுத்தி மறு ஆய்வு செய்கையில் பந்து ஸ்டும்பில் படாமல் சற்று மேலே சென்றது. இதன் காரணமாக அவருக்கு கொடுத்து அவுட் முடிவு அடுத்த நொடியே மாற்றப்பட்டது.
பந்து எவ்வாறு தப்பியது என்ற அதிர்ச்சியில் நடுவர் எராஸ்மஸ் ஆச்சரியம் அடைந்தார். உடனே கேப்டன் விராட் கோலி ஸ்டும்ப் மைக்கில் “உங்களது அணி மீதும் சற்று கவனம் செலுத்துங்கள். எல்லா நேரத்திலும் நீங்கள் மற்றவர்களை பிடித்து போட பார்க்கிறீர்கள்” என்று கூறினார்.
விராட் கோலி எவ்வாறு அப்படி செய்யலாம்
விராட் கோலி அவ்வாறு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்திடம் பேசியது சமூகவலைதளத்தில் மிகப்பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், “ஒரு சர்வதேச கேப்டன் தன் எல்லையை மீறி இவ்வாறு பேசுவது சரியல்ல. இதே மைதானத்தில் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பால் டேம்ப்பெரிங் விஷயத்தில் கேமராவின் கண்களில் மாட்டிக்கொண்டனர். உடனடியாக அவர்கள் மீது தக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் செய்ததை சுட்டிக்காட்டி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் கேமராவின் பார்வையில் அவ்வாறு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்தை பற்றி மரியாதைக் குறைவாக பேசியது மிகவும் தவறான ஒன்று என்று கூறியுள்ளார்.
ஆடம் கில்கிறிஸ்ட் போலவே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே பந்து எவ்வாறு ஸ்டம்பிள் படாமல் தப்பித்தது என்கிற கேள்வி எனக்கும் உள்ளது. அந்த முடிவை பார்க்கையில் எந்த ஒரு வீரனுக்கும் சற்றே கடுப்பாக தான் இருக்கும். இருப்பினும் ஒரு சர்வதேச கேப்டன் அனைத்து வீரர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு வரம்பு மீறி கோலி வெளிப்படையாக பேசுவது சரி இல்லை என்று கூறியுள்ளார்.