“19ஆவது ஓவரை அக்சர் படேலுக்கு இதனால்தான் கொடுத்தேன்..!” – சூரிய குமார் விளக்கம்!

0
1294
Maxwell

இன்று அசாம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி கடைசிப்பந்தில் வீழ்த்தியது. இதன் காரணமாக தற்பொழுது ஆஸ்திரேலிய அணி தொடரில் நீடிக்கிறது.

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 57 பந்தில் 123 ரன்கள் குவித்து ருத்ராஜ் சிறப்பான வேலையைச் செய்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 222 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு 15 வது ஓவர் முடிவில் கடைசி ஐந்து ஓவரில் வெற்றிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது. அதேபோல் கடைசி இரண்டு ஓவரில் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.

இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தன்னுடைய சிறந்த பந்துவீச்சாளர்களை முன்கூட்டியே வீசவைத்து, கடைசி மூன்று ஓவர்களுக்கு பிரசித் கிருஷ்ணாவுக்கு இரண்டு ஓவர் மற்றும் அக்சர் படேலுக்கு ஒரு ஓவர் என்று மீதம் வைத்தார்.

ஆட்டத்தில் 19ஆவது ஓவரை வீச வந்த அக்சர் படடேல் 22 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதற்கு அடுத்து கடைசி ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா 23 ரன்கள் விட்டுத்தர இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் படேல் இருவர் ஓவர்களையும் முன்கூட்டியே முடிக்காதது, இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தோல்விக்கு பின் பேசிய சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “நாங்கள் மேக்ஸ்வெல்லை சீக்கிரம் வெளியேற்ற நினைத்தோம். திருவனந்தபுரத்தில் சீக்கிரத்தில் விக்கெட் எடுத்ததால் நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். அதேபோல் எதிரணி கையில் பனி இருக்கும் பொழுது விக்கெட் கைவசம் இருந்தால் அவர்களும் ஆட்டத்தில் இருப்பார்கள்.

இந்த காரணத்தினால் மேக்சியை சீக்கிரத்தில் அவுட் ஆக எங்களுடைய சிறந்த பந்துவீச்சாளர்களை முன்கூட்டியே பயன்படுத்தினேன். மேலும் அக்சர் படேல் எனக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர். எனவே நான் அவரை கடைசி ஓவருக்கு நம்பினேன்.

இன்று ருத்ராஜ் மிகவும் சிறப்பாக விளையாடினார். நான் ஆட்டம் இழந்ததும் அவர் போட்டியை ஆழமாக எடுத்துச் சென்றார். அவர் ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்வதிலிருந்து அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் கூறி வருகிறேன். நான் என்னுடைய வீரர்கள் குறித்து பெருமைப்படுகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!