மஹி பாய் பவுலர்களிடம் இப்படித்தான் இருப்பார் – தீபக் சகர் சொன்ன புதிய விஷயம்!

0
303
Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2018 ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் தீபக் சகர் 80 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். மீண்டும் 2022 ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த வித்தியாசமே அவர் அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரர் என்பதை உணர்த்தும்!

பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகும் சூழல் இருந்தால் தீபக் சகர் மிகவும் அபாயமான பந்துவீச்சாளர். பந்தை இருபுறமும் திருப்பக்கூடிய வல்லமை பெற்ற இவரை, ஆரம்பத்திலேயே நான்கு ஓவர்கள் வீசவைத்து எதிரணியை ஒட்டுமொத்தமாக மகேந்திர சிங் தோனி முடக்கும் திட்டங்கள் கூட அரங்கேறி இருக்கிறது!

- Advertisement -

கடந்த ஆண்டு இவர் காயத்தின் காரணமாக முழு ஐபிஎல் தொடரும் விளையாட முடியாமல் போனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. அது புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒன்பதாவது இடம் என்கின்ற அளவில் எதிரொலித்தது.

இந்த ஆண்டு முழு தொடரிலும் விளையாடுவேன் அந்த அளவிற்கு எனது உடல் தகுதி மிக நன்றாக இருக்கிறது என்று சமீபத்தில் தீபக் சகர் தெரிவித்திருந்தார். இப்பொழுது மகேந்திர சிங் தோனி பந்துவீச்சாளர்களுடன் எப்படியான தொடர்பை வைத்திருப்பார் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறும் பொழுது
” ஒரு பந்துவீச்சாளராக மஹி பாயுடன் அனுபவம் வித்தியாசமானது. அவர் முதலில் பந்துவீச்சாளர் பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறாரா என்று பார்ப்பார். அப்படி அவர் பொறுப்பை ஏற்க தயாராக இருந்தால், நீங்கள் என்ன பந்து வீச விரும்புகிறீர்களோ அதற்கேற்றவாறு பீல்டிங்கை அமைத்து தருவார்!” என்று கூறினார்!

- Advertisement -

மேலும் இது பற்றி பேசிய அவர்
” பந்துவீச்சாளர் குழப்பத்தில் இருப்பதாக அவருக்கு தோன்றினால், அவரே பீல்டிங்கை அமைப்பார். அப்படி அவர் அமைத்துத் தரும் பொழுது நமக்கே அதற்கு தகுந்தவாறு என்ன பந்தை வீச வேண்டும் என்று தெரியும். 2018 ஆம் ஆண்டு நான் எந்த முனையில் இருந்து பந்துவீச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று மஹி பாய் என்னிடம் தெரிவிப்பார். இப்போது நான் எந்த முனையில் இருந்து வீச வேண்டும் என்று என்னிடம் கேட்கிறார். இப்பொழுது எனக்கு பந்துவீச்சு குறித்து எல்லாம் தெரியும். நான் சிறப்பாக யூகிக்க முடியும். யாராவது குழப்பத்தில் இருப்பதாய் அவர் உணர்ந்தால் மட்டும்தான் அல்லது புதியவராய் இருந்தால் மட்டும்தான் உள்ளே நுழைவார்!” என்று தெரிவித்துள்ளார்!