இந்தியாகிட்ட இருக்க இந்தவொரு பழக்கம், பாகிஸ்தான்கிட்ட இல்ல – முன்னாள் பாகிஸ்தான் வீரர் கணிப்பு!

0
700

இந்திய அணி தங்களது வீரர்களை சரியாக பயன்படுத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தானிடம் அப்படியான அணுகுமுறை இல்லை என்று முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்தார்.

இந்திய அணி அனுபவமிக்க வீரர்களை விளையாடும் 11ல் கொண்டிருந்தாலும், அடுத்த தலைமுறையை உருவாக்க தொடர்ந்து பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் மூலம் பல திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு அதிலிருந்து தேர்வு செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்திய அணியின் பெஞ்ச் வீரர்கள் வேறு எந்த அணிகளிலும் இல்லாத அளவிற்கு திறமையாக இருக்கின்றனர். ஒவ்வொரு இடத்திற்கும் சராசரியாக இரண்டு அல்லது மூன்று வீரர்களை கொண்டிருக்கிறனர். உதாரணத்திற்கு இந்திய அணியின் துவக்க வீரர்களாக தற்போது ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இருந்தாலும், அவர்களுக்கு அடுத்ததாக சுப்மன் கில், இசான் கிசான், ருத்ராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்களும், அனுபவிக்க கேஎல் ராகுல் போன்ற வீரர்களும் இருக்கின்றனர். மேலும் சூரியகுமார் யாதவ் துவக்க வீரராகவும் களமிறங்கக்கூடிய திறமை படைத்தவர்.

விராட் கோலி இல்லாத இடத்தில் சூரியகுமார் யாதவ், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் போன்றோரும் அந்த இடத்தில் விளையாடுவர். இப்படி பேட்ஸ்மேன்கள் மட்டுமில்லாமல் பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவின் இந்த அணுகுமுறையை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரு அணிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா. அவர் கூறுகையில்,

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளிலும் உலகத்தரம் மிக்க வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணி தங்களது வீரர்களை அவ்வப்போது சரியாக பயன்படுத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அணி ஒரே மாதிரியான வீரர்களை பயன்படுத்தி வருகிறது. அவ்வபோது தங்களது திறமைகளை நிரூபித்து உள்ளே வரும் வீரர்களுக்கு போதிய வாய்ப்புகளை கொடுப்பதில்லை. அதேநேரம் இந்திய அணி வெவ்வேறு கேப்டன்களையும் தயார் செய்து வருகிறது. இதுவும் இந்திய அணியின் எதிர்காலத்திற்கு சிறந்தது.” என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர், “ரோகித் சர்மா, விராட் கோலி ரிஷப் பன்ட் ஆகிய மூன்று வீரர்கள் அணியில் இல்லை என்றாலும் அந்த இடத்தில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடுவதற்கு வெவ்வேறு வீரர்களும் இருக்கின்றனர். அவர்களை சரியான தருணத்தில் வாய்ப்புகள் கொடுத்து இந்திய அணி பயன்படுத்தி வருகிறது மற்ற தொடர்களில் அவர்களை உடனடியாக வெளியேற்றி விடாமல் அணியிலேயே வைத்திருந்து நம்பிக்கை கொடுக்கிறது. இதுதான் அவர்களுக்கு கூடுதல் பலத்தையும் கொடுக்கிறது.” என்றார்.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி பற்றி கருத்து தெரிவித்த அவர் ல், “இந்திய அணியின் மூத்த வீரர்களை தற்போது ஓய்வில் வைத்திருக்கின்றனர். இந்தியாவின் ஏ டீம் தான் ஜிம்பாப்வேக்கு அனுப்பியுள்ளனர் என்றே கூறலாம். இந்தியாவின் ஏ டீம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய வருகிறது என்பதை மற்ற நாடுகளும் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக ஜிம்பாப்வே அணி சிறிய அணி என்று கூறி விட முடியாது. அவர்களும் டெஸ்ட் போட்டிகளை விளையாடும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டார்.