9 ஒருநாள் போட்டி மூன்று சதம் 2 அரைசதம் 624 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் 112; “என் பேட்டிங் இப்படித்தான் அதிரடியாக மாறியது!” – புஜாரா ஆச்சரிய தகவல்!

0
241
Pujara

இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பு சுவர் என அறியப்பட்டவர் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். அவரது இடத்தை இந்திய டெஸ்ட் அணியில் நிரப்பியவர் செதேஷ்வர் புஜாரா. இவர் களத்தில் நின்றால் எதிரணி பந்துவீச்சாளர்கள் விரக்தி அடைவது உறுதி. அந்த அளவிற்கு அருமையான தடுப்பாட்டம் விளையாடக் கூடியவர்.

இவரது இந்த சிறப்பம்சத்தால் தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வந்தார். இவருக்கு இந்திய வெள்ளை பந்து போட்டிகளில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் இந்திய ஐபிஎல் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை இவர் இந்திய அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக வாங்கப்பட்ட இவருக்கு அந்த அணியில் ஒரு ஆட்டம் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இவரது டெஸ்ட் பேட்டிங்கும் பாதிக்கப்பட்டது. இதனால் இவருக்கு இந்தியா வந்த இலங்கை அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இவர் இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட சசக்ஸ் அணிக்கு ஒப்பந்தமானார். இவர் எடுத்த மிகச்சிறந்த கிரிக்கெட் முடிவுகளில் இது ஒரு முடிவு என்று கூறலாம்.

சசக்ஸ் அணிக்கு கவுண்டி டெஸ்ட் போட்டிகளில் இவர் மிகப் பிரமாதமாகச் செயல்பட்டார் சதங்களும் இரட்டை சதங்களும் இவரது பேட்டில் இருந்து கொட்டியது. இவரது இந்த சிறப்பான செயல்பாடு இவரை அந்த அணிக்கு கேப்டன் ஆக்கியது.

கவுண்டி டெஸ்ட் போட்டிகள் முடிந்த பிறகு, இங்கிலாந்து நாட்டின் லிஸ்ட் ஏ தொடரான ஒருநாள் தொடர் ராயல் லண்டன் கப் தொடங்கியது. இந்தத் தொடருக்காக களமிறங்கிய புஜாராவின் ஆட்டம் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்தது. மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய இவர் 3 சதங்கள் 2 அரை சதங்கள் என 90 ரன் சராசரியில் 624 ரன்களைக் குவித்து ஆச்சரியப்படுத்தினார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவரது ஸ்ட்ரைக் ரேட்தான். நூறு பந்துகளுக்கு 112 ரன்களை அடித்திருக்கிறார். அதுவும் ஒருநாள் போட்டியில். டெஸ்ட் கிரிக்கெட்டராக அறியப்பட்ட இவரது இந்த அதிரடி பேட்டிங் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

தற்போது தனது பேட்டிங் எப்படி அதிரடியாக மாறியது என்று குறித்து அவர் பேசியிருக்கிறார். இதைப்பற்றி புஜாரா கூறும்பொழுது ” இது நிச்சயமாக எனது ஆட்டத்தின் வேறு பக்கம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்குச் சாதகமாகத் தட்டையாக இருந்தது உண்மைதான். ஆனால் இப்படித் தட்டையான ஆடுகளங்களில் கூட ரன்கள் அடிக்க நீங்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்று முதலில் நினைக்க வேண்டும். நான் இதற்காக எப்பொழுதும் நினைத்தேன் அதற்காக நான் எப்பொழுதும் உழைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இதுபற்றி தொடர்ந்த அவர் “கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஐபிஎல் தொடரில் நான் சென்னை அணியின் ஒரு அங்கமாக இருந்தேன். எந்த ஒரு ஆட்டத்திலும் விளையாடாத நான் எனது அணியின் சக வீரர்கள் ஆட்டத்திற்கு தயாராவதை பார்த்து வந்தேன். அப்பொழுது எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. அதாவது நான் குறுகிய வடிவத்தில் விளையாட விரும்பினால் கொஞ்சம் பயமற்று விளையாட வேண்டும். குறுகிய வடிவத்தில் நீங்கள் பரிசைப் பெற விரும்பினால் உங்களது ஷாட்களை நீங்கள் விளையாட வேண்டும். இதை நான் உணர்ந்து கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

தனது பேட்டிங் அதிரடியாக மாறியதில் சசக்ஸ் அணியின் பயிற்சியாளரான, ஜிம்பாப்வே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கிரான்ட் பிளவர் தனக்கு எப்படி உதவினார் என்று புஜாரா கூறும்பொழுது ” ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் கோப்பைக்கு முன்பு நான் அதிரடியாக விளையாடுவதற்கு பயிற்சி செய்தேன். நான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் உடன் சில ஷாட்கள் பற்றி பேசினேன். பயிற்சியின் போது நான் அந்த ஷாட்களை விளையாடுவதைப் பார்த்து அவர் நன்றாக விளையாடுவதாக சொன்னார். இது எனது நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. சில தூக்கி அடிக்கும் ஷாட்களை நான் விளையாடுவதன் மூலம் என்னால் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.