நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கும் மிகவும் சிறப்பான ஒன்றாகவும், அவர்களுடைய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகவும் மாறி இருக்கிறது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருந்தது. இன்று சென்னை சேப்பாக்கத்தில் 92 உலக சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது.
இந்த இரண்டு வெற்றிகளுமே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெறக்கூடியவை. இதை ஆப்கானிஸ்தான் மக்கள் எந்த நாளும் மறக்க மாட்டார்கள். வரும் காலங்களில் இந்த வெற்றிகள் நினைவுக் கூரப்பட்டு கொண்டே இருக்கும்.
மேலும் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு பெரிய அணிகளுக்கு எதிராகவும் பெற்ற வெற்றி என்பது நெருக்கமான போட்டியாக அமையவில்லை. மாறாக ஆட்டம் ஆப்கானிஸ்தான் கையில் இருந்தே வென்றது. எந்த இடத்திலும் இந்த அணிகளால் ஆப்கானிஸ்தான் அணிக்கு நெருக்கடியை உண்டாக்க முடியவில்லை.
இந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பின்பாக ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபி மிகவும் உருக்கமாகப் பேசியிருக்கிறார். ஓய்வை அறிவித்து விட்ட பின்பும் கூட ஆப்கானிஸ்தான் அணிக்காக இந்த உலகக் கோப்பைக்கு வந்தார்.
இந்த வெற்றி குறித்து பேசிய முகமது நபி “ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானுக்கும் இது மிகப்பெரிய தருணம். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய தொடர்களில் எட்டு முறை விளையாடி முதல் முறை வெற்றி பெற்று இருக்கிறோம். இது அழகான தருணம். நாங்கள் இங்கிலாந்தையும் பாகிஸ்தானையும் தோற்கடித்து இருக்கிறோம். அணி இப்பொழுது நம்பிக்கையுடன் இருக்கிறது.
முன்பு நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி நேரத்தில் போட்டியை இழந்து இருந்தோம். இப்போது நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். இந்த ஆடுகளம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது போல இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் முற்றிலுமாக மாறிவிட்டது.
நூர் அகமது மிகவும் சிறப்பாக பந்து வீசினார். இது மிகவும் அற்புதமான உணர்வு நாங்கள் பங்களாதேஷுக்கு எதிராக தோற்று இருக்கக் கூடாது. ஆனால் இப்பொழுது பாதி போட்டிகள் முடிந்து விட்டது. இங்கு எங்களுக்கு நல்ல மரியாதையும் வரவேற்பும் கிடைத்தது. இது அடுத்த புனேவிலும் தொடரும் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!