டி20 உலகக்கோப்பையில் இந்த இந்திய வீரர் கட்டாயம் சதம் அடிப்பார் – கிரீம் ஸ்வான்!

0
1902
Rohitsharma

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆபத்தான பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்கள், சர்வதேச டி20 போட்டிகளில் நான்கு சதங்கள் என எந்த ஒரு பேட்ஸ்மேனும் எளிதில் தொட்டுவிட முடியாத உயரங்களை ரோகித்சர்மா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் வைத்திருக்கிறார்!

ரோகித் சர்மா முதலில் அறிமுகமான பொழுது பேட்டிங்கில் நடுவரிசையில்தான் வந்து கொண்டிருந்தார். அவருக்கு கிடைக்கும் ஒரு 20 ரன் நல்ல தொடக்கத்தை அவரால் அதிகப்படியாக அரைசதங்களாக மாற்ற முடியவில்லை. அதேபோல் அரைசதங்கள் கிடைத்தால் அதை சதமாக மாற்ற முடியாமல் தடுமாறினார். மேலும் அவருக்கு இந்திய அணியில் ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை.

இப்படியான நிலையில்தான் 2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மகேந்திர சிங் தோனி ரோகித் சர்மாவை துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கினார். அதற்குப் பிறகு ரோஹித் சர்மாவின் பேட்டிங் வேறு ஒரு தரத்திலும் உயரத்திலும் ஏற ஆரம்பித்தது. இதே ஆண்டு காலத்தில் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்திருந்தது. அந்தத் தொடரில் ஒரு சதம் அடித்து இருந்த ரோகித் சர்மா, 7வது ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். இங்கிருந்துதான் அவர் கிரிக்கெட் வாழ்க்கை வெகு வேகமாக மாற ஆரம்பித்தது.

இதற்குப் பிறகு அவருக்கு டி20 கிரிக்கெட்டிலும் சதங்கள் வர ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா அணியுடன் முதல் சர்வதேச டி20 சதம் வந்தது. இதற்கடுத்து 2017 ஆம் ஆண்டு இலங்கை அணியுடனும், அடுத்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உடனும் டி20 சர்வதேச சதங்கள் வந்தன. அதிக சர்வதேச டி20 சதங்கள் அடித்தவர்களில் ரோகித் சர்மாதான் முதலிடத்தில் இருக்கிறார்.

தற்போது இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் ” இது வெறும் வடிவம். டி20 வடிவத்தில் நீங்கள் பேட் செய்யும் போது கேப்டன்சி அழுத்தம் எல்லாம் பார்க்க கூடாது. ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விராட் கோலி இப்படித்தான் எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடுவார். இந்த கிரிக்கெட் வடிவத்தில் நீங்கள் பேட் செய்யும் பொழுது அழுத்தம் எல்லாம் சிந்தனைக்குள் வராது. தெளிவான மனதுடன் பந்தில்தான் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” டி20 உலக கோப்பையில் கண்டிப்பாக சதம் அடிக்கும் வீரர் ரோகித் சர்மாதான். ரோகித் ஷர்மா பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. அவர் தான் இந்திய அணியை வழிநடத்த சரியான வீரர். தற்போது தனது சிறந்த பேட்டிங் ஃபார்மில் இல்லை. ஆனால் இந்திய அணி தொடர்ந்து சிறந்த முடிவுகளை அளிக்கிறார்கள். இதுதான் அவரது வழிநடத்தலின் சிறப்பு ” கூறியிருக்கிறார்!