டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு இவர்கள்தான் அதிக ரன்; அதிக விக்கெட் எடுப்பார்கள் – ஆகாஷ் சோப்ரா புதிய கணிப்பு!

0
328
Aakash Chopra

கிரிக்கெட் தன்னை வேறொரு வடிவத்தில் தகவமைத்துக் கொண்டு வேகமாகப் பெரிய ரசிகர் கூட்டத்தோடு இன்னும் பல நாடுகளுக்கு பரவ ஆரம்பித்திருக்கும் தீவிரமான காலத்தின் முதல் பருவம் இது!

நாம் கொஞ்சம் கொஞ்சமாக டி20 கிரிக்கெட் வடிவத்திற்குள் இயல்பாக பொருந்திப் போக ஆரம்பித்துவிடுவோம். அதே சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் அழியாமல் தொடர்ந்து வரப்போகிறது. ஆனால் இடையில் வந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று சச்சின், ரிக்கி பாண்டிங், லாரா, இன்சமாம் உல் ஹக், ஜெயசூர்யா போன்ற பெரிய வீரர்களை அடையாளம் காட்டி, நம்மை மகிழ்வித்த, பரவசப்படுத்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய போகிறது!

- Advertisement -

இனி டி20 கிரிக்கெட் வடிவம்தான் கிரிக்கெட்டில் பல காலத்திற்கு கோலோச்ச போகிறது. ஏறக்குறைய அனைத்து பெரிய கிரிக்கெட் நாடுகளும் தனியாக டி20 உரிமையாளர் தொடர்களை நடத்த ஆரம்பித்து விட்டன. அதேபோல் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. இந்த கிரிக்கெட் வடிவத்திற்கு நிறைய புதிய ரசிகர்களும் உருவாகி விட்டார்கள். பழைய கிரிக்கெட் ரசிகர்களும் இந்த கிரிக்கெட் வடிவத்தை விரும்பவே செய்கிறார்கள்.

இந்த டி20 வடிவ கிரிக்கெட்டை இன்னும் வேகமாகப் புதிய ரசிகர்களிடமும், புதிய நாடுகளிடமும் கொண்டு சேர்க்க, டி20 உலகக் கோப்பை மிகப்பெரிய முக்கியக் கருவியாக இருக்கும். இப்படியான டி20 உலக கோப்பையின் எட்டாவது தொடர் இன்னும் சில நாட்களில் அக்டோபர் 22-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கிறது. இந்தத் தொடரைச் சுற்றி, தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்றும் வீரர்களைச் சுற்றி பல கருத்துகள், பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்திய அணிக்காக இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த பேட்ஸ்மேன்? மற்றும் எந்த பவுலர்? மிகச் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது என்று தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது ” இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்தவராக கேஎல் ராகுல் இருக்கலாம். ஏனென்றால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து மிக நன்றாக வேகமாக பேட்டுக்கு வரும். இது கேஎல்ராகுல் விளையாடுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் கேஎல் ராகுல் தொடக்க வீரராக வருவதால் அதிக நேரம் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் அவர் அதிக நேரம் நின்று விளையாடுவது மிகவும் முக்கியம். பந்துவீச்சு என்று எடுத்துக்கொண்டால் அர்ஸ்தீப் சிங் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அவர் புதிய பந்தில் வீசுவார். மேலும் ஆட்டத்தின் இறுதியில் வீசுவார். சில நேரங்களில் அவர் நடுவில் வீசவும் வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு வேகம் மற்றும் எகிறும் தன்மையுள்ள, மேலும் பெரிய ஆஸ்திரேலிய மைதானங்கள் பொருத்தமாக இருக்கும் ” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “உலகின் சிறந்த அணி நீங்கள் என்று கூறினால், உங்கள் அணி சிறந்த ஆழம் கொண்டது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நடத்தும் டி20 லீக் உலகில் பெரியது சிறந்தது என்று நீங்கள் கருதினால், நீங்கள் நிச்சயம் டி20 உலகக் கோப்பையை வென்றுதான் ஆகவேண்டும் ” என்றும் கூறியிருக்கிறார்!