“இவங்கக்கிட்ட திட்டம் எதுவுமே கிடையாது ; ஆஸ்திரேலியாவ பாத்து கத்துக்கனும்” – பிசிசிஐ -யை வெளுத்த ரவி சாஸ்திரி!

0
146
Ravi

மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்ததற்குப் பிறகு, விராட் கோலி ரவி சாஸ்திரியின் தலைமையில் அணி நல்லபடியாகவே பயணித்து வந்தது.

இந்த நிலையில் விராட் கோலி உள்விவகாரத்தால் கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்த பிறகு, இந்திய அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளும் இந்திய அணியின் செயல்பாடுகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகமும், இந்திய தேர்வுக்குழுவும் எடுக்கின்ற முடிவுகள் எந்தவித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் எப்பொழுதும் விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையிலேதான் தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து பல முன்னாள் வீரர்களும், முன்னாள் தேர்வுக்குழு தலைவரும் கூட பல விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இவர்களின் செயல்பாடு எந்தவித திட்டமும் தொலைநோக்கும் இல்லாமல் இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ” நான் இந்த விஷயத்திற்கு உங்களுக்கு ஆஸ்திரேலியாவை உதாரணம் காட்டுகிறேன். ஆடம் கில்கிறிஸ்ட் இளைஞராக இருந்தார். இன்னொரு முனையில் அனுபவம் மிக்க இயான் ஹீலி இருந்தார். அவரால் இன்னும் ஒன்று இரண்டு வருடங்கள் சிறப்பாக விளையாடி இருக்க முடியும்.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியா நிர்வாகம் உலக கிரிக்கெட்டில் போட்டியிடக்கூடிய தன்மை உடன் முன்னோக்கி யோசித்தது. எனவே அவர்கள் ஆடம் கில்கிறிஸ்ட்டை கொண்டு வந்தார்கள். இப்படி அமைப்பில் இருப்பவர்களிடம் தெளிவான சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் இருக்க வேண்டும்.

எனது பார்வை எப்பொழுதும் வலிமையான இந்திய அணியாக இருக்க வேண்டும். இது உங்களுக்கு இளமையும் அனுபவமும் சேரும்பொழுது சாத்தியமாகும். நான் ஒரு வீரரிடம் இளமை இருக்கிறது என்று மட்டுமே பார்க்க மாட்டேன். அவரிடம் அனுபவ வீரரிடம் போட்டியிடக்கூடிய குணமும் திறமையும் இருக்க வேண்டும். இருந்தால் நான் அந்த வீரரிடம் போவேன்.

இந்திய டி20 கிரிக்கெட்டில் மூத்த வீரர்கள் படிப்படியாக விலக்கப்பட இருக்கிறார்கள். நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட் எனும்பொழுது இது பிரச்சினையே கிடையாது. ஆனால் மற்ற வடிவங்களில் கொஞ்சமாகத்தான் இது இருக்கிறது. ஐபிஎல் காரணமாக நிறைய உயர்தர திறமை கொண்ட இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் டெஸ்ட் கிரிக்கட்டுக்கு இளைஞர்களை அப்படியே எடுக்க மாட்டேன். நான் தேர்வாளர்களுடன் சேர்ந்து குறிப்பிட்ட வீரர் எந்த மாதிரியான சூழ்நிலையில் ரன்கள் எடுத்தார் என்று பார்ப்பேன். எனக்கு கடினமான நிலைகளில் போராடக்கூடிய குணம் படைத்த வீரர்கள்தான் தேவை. இப்படி அச்சமில்லாமல் போராடும் வீரர்களை வைத்துதான் பெரிய அணியை உருவாக்க முடியும். மேலும் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது இந்தியாவில் பென்ஞ் வலிமை அதிகமாக இருக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!