“எனக்கு பதிலா ரகானேவ தேர்வு செய்யலாம் ஆனா விஜய் சங்கரை ஏன் செஞ்சாங்க?” – சரமாரியாக தாக்கும் அம்பதி ராயுடு!

0
1772
Ambatirayudu

நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனின் இறுதிப்போட்டியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து கோப்பையோடு ஓய்வு பெற்றுக்கொண்டார்!

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அம்பதி ராயுடு நீக்கப்பட்டு அவரது இடத்தில் தமிழகத்தின் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

அந்தத் தேர்வு குறித்து அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே.பிரசாத் விஜய் சங்கர் ஒரு 3d பிளேயர் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். இதைச் சமூக வலைதளத்தில் நக்கலாக அப்பொழுது அம்பதி ராயுடு கேலி செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்பொழுது இது குறித்து அம்பதி ராயுடு கூறும் பொழுது ” தேர்வுக்குழு ரகானேவை அல்லது அவரைப் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த மூத்த வீரரை எனக்கு பதிலாகத் தேர்ந்தெடுத்து இருப்பார்கள் என்றால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியா வெல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் என்னுடைய இடத்தில் அனுபவம் இல்லாத ஒரு இளம் வீரரை எப்படி தேர்வு செய்தார்கள் என்று புரியவே இல்லை. அனுபவம் வாய்ந்த ஒருவரை தேர்வு செய்திருந்தால் அது அணிக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும். எனக்கு இந்த இடத்தில்தான் கோபம் வந்தது.

- Advertisement -

இது விஜய் சங்கரை பற்றியது அல்ல. அவர் மீது எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. அவர் என்ன செய்திருக்க முடியும்? அவர் அவருடைய கிரிக்கெட்டை விளையாடி இருக்க முடியும். என்னதான் யோசித்தாலும் இந்தச் சம்பவத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவர்கள் உலக கோப்பையில் விளையாடுகிறார்களா அல்லது சாதாரண லீக்கில் விளையாடுகிறார்களா? என்று புரியவில்லை.

எல்லோரும் விஜய் சங்கரின் பின்னாலே சென்றார்கள். இதற்கான அவர்களுடைய சிந்தனையும் தர்க்கமும் எனக்கு புரியவில்லை. என்னை மாற்ற முடிவு செய்திருந்தால் என்னை போன்ற ஒரு வீரரைத் தேர்வு செய்திருக்கவேண்டும். ஆனால் ஆறாவது, ஏழாவது இடத்தில் விளையாடும் ஒரு வீரரை நான்காவது இடத்தில் விளையாடும் வீரருக்குப் பதிலாக எப்படி தேர்வு செய்து விளையாட வைக்க முடியும்?” என்று கேட்டிருக்கிறார்!