7 நோபால், 4 ஒயிடு.. சின்ன பசங்களை எடுத்தது தப்பா போச்சா? – ராகுல் டிராவிட் தரமான பதில்!

0
1780

இரண்டாவது டி20 போட்டியில் இளம் வீரர்கள் சற்று மோசமாக பந்துவீசியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் அடித்தது. இந்திய அணிக்கு கடைசி 5 ஓவர்கள் மிக மோசமாகவே அமைந்தது.

15 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் இருந்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் எட்டியது. இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் எவ்வளவு ரன்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று.

இதை சேஸ் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது.

இப்போட்டியில் ஐந்து நோபால்கள் வீசிய அர்ஷதீப் சிங் மீது கடும் விமர்சனங்கள் வந்திருக்கின்றன. அத்துடன் சிவம் மாவி ஒரு நோபால், உம்ரான் மாலிக் ஒரு நோபால் என மொத்தம் ஏழு நேபால்கள் மற்றும் நான்கு ஒயிடுகள் இப்போட்டியில் வீசப்பட்டிருக்கின்றன.

அனுபவம் அற்ற இந்த வீரர்களை எடுத்து தவறு செய்து விட்டார்கள் மற்றும் எந்த நேரத்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்று பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்கள் என்கிற விமர்சனங்கள் இளம் வீரர்கள் மீது வந்திருக்கிறது. அதற்கு தக்க பதில் கொடுத்திருக்கிறார் ராகுல் டிராவிட்.

அவர் பேசியதாவது: “யாரும் வேண்டுமென்று டி20 போட்டிகளில் இப்படி நோபால்கள் வீச மாட்டார்கள். அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்று நன்றாக தெரியும். இந்த தருணத்தில் இளம் வீரர்களின் குறைகளை சுட்டிக்காட்டி எடுத்துச் சொல்ல வேண்டுமே தவிர, கடும் விமர்சனங்களை முன்வைப்பது தவறு. அவர்களது ஆரம்ப கட்டத்திலேயே இந்த தவறுகளை செய்து கற்றுக்கொண்டு சரி செய்து கொள்வார்கள். விமர்சனங்களை அவர்கள் வளரும் விதமாக வைக்க வேண்டும். மனம் உடையும் அளவிற்கு விமர்சனங்களை வைப்பது ஆரோக்கியமானது அல்ல.

அவர்களுடன் நாம் பொறுமை காத்து அவர்களது செயல்பாடை வளர்க்க வேண்டும். தற்போது லெஜெண்ட் என பார்க்கப்படும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஆரம்பகட்டம் சறுக்கலாகவே இருந்திருக்கிறது. அதிலிருந்து கற்றுக் கொண்டுதான் மேலே வந்திருப்பார்கள். ஆகையால் நாம் அதை புரிந்து கொண்டு பேசுவது அவர்கள் வளர்ச்சிக்கு உதவும்.” என்றார்.