“இந்த மாதிரி கண்டிஷனில் இவங்க ரெண்டு பேரும்தான் மாஸ்டர்கள்!” – கேப்டன் ரோஹித் சர்மா வெற்றிக்கு பிறகு பேச்சு!

0
6551
Rohitsharma

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலியா ஊடகங்கள், ஆஸ்திரேலியா ரசிகர்கள் என ஆஸ்திரேலியா தரப்பில் இருந்து இந்திய டெஸ்ட் ஆடுகளங்கள் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் சந்தித்து நவம்பர் ஒன்பதாம் தேதி நாக்பூரில் ஆரம்பித்தது நான்கு போட்டிகள் கொண்ட இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி!

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி எந்தவித போராட்டத்தையும் காட்டாமல் முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து வந்த இந்திய அணியோ 400 ரன்கள் குவித்தது. ஆடுகளம் விளையாட முடியாதபடி இருக்கிறது என்று குற்றம் சாட்ட தயாராக இருந்த ஆஸ்திரேலியா தரப்புக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

- Advertisement -

அடுத்து இந்திய அணி இன்னும் மிகச் சிறப்பாக இறங்கி ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் அவர்களை 91 ரன்களுக்கு ஆட்டம் இழக்க வைத்து இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா தரப்பிலிருந்து அடுத்து ஆடுகளம் குறித்து எந்தவித அவதூறுகளும் எழாதபடி செய்தது. ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் சிலரும் ஆஸ்திரேலியா ஆடுகளம் விளையாடுவதற்கு மிகவும் கடினமானது கிடையாது என்று ஒப்புக் கொண்டனர்.

இதற்கு அடுத்து பிப்ரவரி 17ஆம் தேதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கட்டுகள் வித்தியாசத்தில் தற்போது அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மிகச் சிறப்பாக திரும்பி வந்து நேற்று வரை ஆட்டத்தை கையில் வைத்திருந்தாலும் இன்று சரியான திட்டத்துடன் பேட்டிங் செய்யாத காரணத்தால் இந்திய அணியிடம் குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவிடம் சரணடைந்து அவருக்கு ஏழு விக்கெட்டுகளை தந்து 113 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது!

வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா
” இந்தப் போட்டியின் முடிவு எங்களுக்கு அற்புதமானது. நேற்றிலிருந்து நாங்கள் திரும்பி வந்து இன்று செய்துள்ள விஷயங்களை திரும்பிப் பார்க்கிறேன், நாங்கள் எங்கள் வேலையை முடித்த விதம் அருமையாக இருக்கிறது. நாங்கள் ஒரு ரன் மட்டும் பின்தங்கி இருந்தாலும் நாங்கள் நான்காவது இன்னிங்ஸ் விளையாட வேண்டி இருந்ததால் நாங்கள் பின்தங்கி இருப்பதாகவே நான் உணர்ந்தேன். பந்துவீச்சாளர்கள் அருமையாக இருந்தார்கள். இன்று காலை 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது பாராட்டுக்குரியது. பின்பு நாங்கள் எங்களது பேட்டிங்கால் வேலையை முடித்தோம்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா ” இது போன்ற ஆடுகளத்தில் நாம் ஏதாவது வித்தியாசமாக செய்தாக வேண்டும். வெளியே வந்து ஷாட்கள் விளையாடுவதற்கு நாங்கள் தயாராக இருந்தோம். எங்களது நோக்கம் சரியான இடத்தில் தாக்குவதும் அவர்கள் தவறு செய்யும் வரை காத்திருப்பதும்தான். அது அப்படியே நடந்தது. இப்படியான வானிலையில் விளையாடும் பொழுது எப்பொழுதும் ஒரு ஈரப்பதம் இருக்கும். இந்தப் போட்டியில் நான் கவனித்தது ஆரம்பத்தில் விளையாடுவதற்கு கடினமாகவும் பின்பு போக போக விளையாட சுலபமாகவும் மாறுவதைதான். எனவே நாங்கள் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கடினம் கொடுக்க நினைத்தோம். இப்படியான கண்டிஷன்னில் பந்து வீசுவதில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் மாஸ்டர்கள்!” என்று கூறி முடித்தார்!