என்னோட இந்த ரெண்டு இன்னிங்ஸை, என் வாழ்நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருப்பேன் – சூரியகுமார் யாதவ்!

0
425

என்னுடைய இந்த இரண்டு ஆட்டத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் பார்த்துக் கொண்டே இருப்பேன் என்று சூரியகுமார் யாதவ் கூறி இருக்கிறார்.

‘மிஸ்டர் 360 டிகிரி’ என அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ், இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் அறிமுகமாகி இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள் 57 போட்டிகளில் 1800 ரன்களுக்கும் அதிகமாக அடித்துள்ளார்.

குறிப்பாக 2022 ஆம் ஆண்டு மட்டுமே ஆயிரம் ரன்களுக்கும் அதிகமாக அடித்திருக்கிறார். அதில் இரண்டு சதங்கள் அடங்கும். இங்கிலாந்து அணிக்கு எதிராக 117 ரன்கள் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக 111 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 14 அரைசதங்களையும் அடித்திருக்கிறார்.

தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இவர், எண்ணற்ற போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காகவும் முக்கிய வீரராக இருந்து வருகிறார்.

இதுவரை நீங்கள் ஆடிய டி20 ஆட்டங்களில் எந்த இரண்டு ஆட்டத்தை வாழ்நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு குறிப்பிட்டு பதில் அளித்திருக்கிறார்.

“சர்வதேச டி20இன் அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்ததை மீண்டும் மீண்டும் நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். ஏனெனில் எனக்கு அதுதான் முதல் போட்டி. என் வாழ்நாளில் மறக்கவே முடியாதது.”

அடுத்ததாக, “2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் குவாலிபயர் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணி மோதியபோது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான் அடித்த அரைசதத்தை என்னால் மறக்க முடியாது. அப்போட்டியில் 130-135 ரன்கள் சேஸ் செய்யவேண்டும். நான் மட்டும் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் அடித்தேன். அதை நான் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு ஆவலோடும் மகிழ்ச்சியுடனும் இருப்பேன்.” என்று தெரிவித்தார்.