“தோனி கிடையாது இந்தியாவின் சிறந்த கேப்டன் இவர்தான்” – முகமது கைஃப் அதிரடி கருத்து!

0
520
Kaif

இந்திய கிரிக்கெட்டில் மிக வெற்றிகரமான கேப்டன் என்றால் யோசிக்காமல் மகேந்திர சிங் தோனி என்று கூறி விடலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் மகேந்திர சிங் தோனியா இல்லை சவுரவ் கங்குலியா என்கின்ற விவாதம் வந்துவிடும்.

காரணம், கங்குலி இளம் வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அணிதான் மேற்கொண்டு வளர்ந்து வந்து ராகுல் டிராவிட் கைகளுக்கும், அங்கிருந்து மகேந்திர சிங் தோனி கைகளுக்கும் சென்றது என்பதாகத்தான் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் முதலில் இளம் வீரர்களை பெரிய அளவில் ஆதரித்த கேப்டனாக சவுரவ் கங்குலி இருக்கிறார். அவரது காலத்தில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப், ஜாகீர் கான், மகேந்திர சிங் தோனி இப்படி இன்னும் நிறைய இளம் திறமையாளர்கள் வந்தார்கள். அவர்களை அவர் மிக உறுதியாக ஆதரித்து நம்பிக்கை கொடுத்தார்.

2000ஆம் ஆண்டு சூதாட்டப் பிரச்சனையில் இந்திய அணியின் அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் மற்றும் துணை கேப்டன் ஜடேஜா இருவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அப்படி ஒரு மோசமான சூழலில் இருந்து அணியை மீட்டெடுத்து 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி செல்வது என்பது அவ்வளவு சாதாரணமான காரியம் கிடையாது. அதை மிகச் சரியாக செய்து முடித்தவர் கங்குலி.

இப்படி இந்திய கிரிக்கெட்டில் யார் மிகச் சிறந்த கேப்டன் என்ற வாதங்கள் வரும் பொழுதெல்லாம் மகேந்திர சிங் தோனி மற்றும் கங்குலியின் பெயர்கள் மாற்றி மாற்றி உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கும். இதற்கு ஏற்றார் போல இருவரது பிறந்த நாளும் அடுத்தடுத்த நாட்களில் வரும். இவர்கள் பிறந்த நாள் வரும் பொழுதெல்லாம் இந்த விவாதங்களும் ஆரம்பித்து விடும்.

- Advertisement -

சவுரவ் கங்குலியின் கேப்டன்சி காலத்தில் நாட்வெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து 300க்கும் மேற்பட்ட ரண்களை துரத்தி இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றி, ஒரு சரித்திர வெற்றி. அந்த வெற்றியில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று முடித்தவர் முகமது கைப். தற்போது அவர் தனது கேப்டன் பற்றி மிக முக்கியமான கருத்து ஒன்றைக் கூறி இருக்கிறார்.

சவுரவ் கங்குலி பற்றி முகமது கைஃப் கூறும் பொழுது ” சிறந்த கேப்டன் யார் என்றால் நான் சௌரவ் கங்குலியைத்தான் கூறுவேன். நான் வெளியே சென்று என்னுடைய மிகச் சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறுவார். மேலும் அவர் எனக்கு எப்பொழுதும் ஆதரவாக இருப்பதாக கூறுவார். இதுவெல்லாம் எனக்கு இப்பொழுதும் நினைவிருக்கிறது.

அவருடைய கருத்து எல்லாம் மிகப்பெரிய விஷயங்கள். ஒரு இளைஞனாக உங்களுக்கு கங்குலி போன்ற கேப்டன் இருந்தால், இந்தியாவுக்காக விளையாடும் பொழுது நீங்கள் மிக தைரியமாக இருப்பீர்கள்!” என்று கூறியிருக்கிறார்!