இந்தியாவுல அவர விட பெஸ்ட் ஸ்பின்னர் யாரும் கிடையாது.. அவரை ஏன் இப்படி பண்ணிங்க? – ஹர்பஜன் சிங் ஏமாற்றம்!

0
4086
Harbhajan

13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் இந்த முறை முழுமையாக முதல்முறையாக நடத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் நடத்தப்பட இருக்கின்ற காரணத்தினால் அதற்கு ஏற்றவாறு ஆசியாவுக்கு வெளியே இருக்கும் அணிகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன!

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக, இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு சிறந்த பயிற்சியாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடர் அமைந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆசிய அணிகளுக்கு உலகக் கோப்பை காண அணியை இறுதி செய்வதிலும் மிக உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. எனவே ஆசியக் கோப்பை தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இந்த முறை மாறுகிறது.

இந்தத் தொடரில் பங்கு பெறும் ஏனைய ஆசிய அணிகள் தங்களது அணியை அறிவித்த பின்பும், இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களது முக்கிய வீரர்கள் காயத்தில் இருக்கின்ற காரணத்தினால், மிகத் தாமதமாக நேற்று முன்தினம்தான் தனது அணியை அறிவித்தது.

ஆசியக் கோப்பைக்கு இந்திய தேர்வு குழுவால் அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக குல்திப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் என மூவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதிர்ச்சி அடையும் விதமாக இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் சாகல் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரது செயல்பாடு சிறப்பாக இல்லை என்பது, தற்பொழுது தேர்வில் எதிரொலித்து இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “சாகல் அணியில் இல்லாதது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அவர் பேட்மேன்களுக்கு பந்தை வெளியே திருப்பக்கூடிய லெக் ஸ்பின்னர். உண்மையான சுழற் பந்துவீச்சாளரை பற்றி நீங்கள் பேசினால், இந்தியாவில் அவரை விட சிறந்த சுழற் பந்துவீச்சாளர் யாரும் கிடையாது. சில போட்டிகளாக அவரது பந்துவீச்சு பார்ம் சரியில்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால் அது அவரை மோசமான பந்துவீச்சாளராக மாற்றவில்லை.

இந்திய அணியில் அவரது இருப்பு அவசியம் என்று நினைக்கிறேன். அவருக்கு இன்னும் கதவுகள் மூடப்படவில்லை என்றும் நினைக்கிறேன். உலகக் கோப்பை இந்தியாவில் இருப்பதால் அவர் மிகவும் முக்கியம். சாகல் நிருபிக்கப்பட்ட ஒரு மேட்ச் வின்னர்.

என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய பார்ம் நன்றாக இல்லை. அதனால் நீங்கள் அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் அணியில் இருந்திருந்தால் அவருக்கு நம்பிக்கை அப்படியே இருந்திருக்கும். எந்த ஊரு வீரரும் நீக்கப்பட்ட பிறகு வந்து விளையாடினால் அவருக்கு தனிப்பட்ட அழுத்தம் இருக்கும் இது சிரமம்!” என்று கூறியிருக்கிறார்.