இந்த உணர்வை சொல்ல வார்த்தையே கிடையாது.. எங்க மக்கள் முகத்தில் சிரிப்ப பார்க்கிறோம் – வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் உருக்கமான பேச்சு!

0
1447
Powell

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு ஒரு மாத ஓய்வில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட மிகப்பெரிய கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்தது.

நேற்று இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டி நடைபெற்றது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நடைபெற்ற நான்கு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்று தொடர் சமநிலையில் இருந்தது.

- Advertisement -

நேற்றைய ஐந்தாவது டி20 போட்டிக்கான டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து ஒன்பது விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. சூரியகுமார் 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ செப்பர்ட் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த முறை அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ப்ரண்டன் கிங் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 85 ரன்கள் எடுக்க, 18 ஓவர்களில் இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த தொடர் வெற்றிக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் ” இந்த உணர்வை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தியாவை எங்களது சொந்த மண்ணில் நாங்கள் வீழ்த்தி இருப்பது மிகப்பெரிய விஷயம். நேற்று இந்தியா எங்களை மோசமாக வீழ்த்திய பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசினோம். நாங்கள் எங்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வர மட்டும் கிடையாது மக்களுக்காகவும் விளையாடுகிறோம்.

- Advertisement -

அணியின் பயிற்சி ஊழியர்களுக்கும் மற்றும் சேர்மேனுக்கும் நாங்கள் நிறைய கடன் பட்டு உள்ளோம். நேற்று நாங்கள் எளிதில் பீதி அடைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் எங்களை அமர வைத்து பேசினார்கள். நாங்கள் எப்படி சென்று வெல்லலாம் என்று யோசித்தோம்.

தனிப்பட்ட செயல்பாடுகளில் இங்கு எல்லோரும் பெரியவர்கள். தனிநபர்கள் சிறப்பாக செயல்படும் பொழுது அது அணியின் வெற்றிக்கு உதவுகிறது. இந்த வகையில் பூரன் மிகப்பெரிய வீரர். ஐந்து ஆட்டத்தில் மூன்று ஆட்டங்களில் அவரை மிகச் சிறப்பாக விளையாடி கொடுக்கும்படி கேட்டோம்.

மேலும் இத்தகைய சக்தி வாய்ந்த இந்திய அணியை கட்டுப்படுத்திய எங்களது பந்துவீச்சு யூனிட்டுக்கும் பெருமைகள் போய்ச் சேரவேண்டும். இந்த முறை ரசிகர்கள் எங்களை சுற்றி நிறைய திரண்டனர். எங்களுக்கு ஆதரவளித்தனர். உடல் ரீதியாக மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் கிரிக்கெட் எப்படி ஒரு உந்து சக்தியாக இருக்கிறது என்பதையும், கரீபியன் முகங்களில் சந்தோஷத்தை வரவழைக்க இதை பயன்படுத்த முடியுமா?” என்பதையும் இது காட்டுகிறது என்று கூறி இருக்கிறார்!