“வெற்றிக்கு காரணம்.. என் வாழ்க்கையில் இப்படி நடந்தது இதுதான் முதல் முறை” – தொடர் நாயகன் பும்ரா பேட்டி!

0
460
Bumrah

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு 31 வருடங்களாக கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல்முறையாக கேப்டன் மைதானத்தில் ரோகித் சர்மா தலைமையில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றிருக்கிறது. மேலும் தொடரையும் சமன் செய்திருக்கிறது.

நடந்து முடிந்த இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவை முதல் இன்னிங்ஸில் சிராஜ் ஆறு விக்கெட் எடுத்து சரித்தார்.

- Advertisement -

இதற்கடுத்து தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா ஆறு விக்கெட் எடுத்து, பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் இந்தியாவிற்கு குறைவான இலக்கு கிடைக்க முக்கிய காரணமாக மாறினார்.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது முகமது சிராஜிக்கு வழங்கப்பட்டது. அதேபோல் இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருது தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் மற்றும் பும்ராவுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது. முதல் போட்டியில் நான்கு விக்கெட் பும்ரா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர் நாயகன் விருது பெற்ற பும்ரா பேசும்பொழுது “இந்த மைதானம் என் இதயத்தில் எப்பொழுதும் தனி இடத்தைப் பெற்ற மைதானம் ஆகும். ஏனென்றால் 2018 ஆம் ஆண்டு இங்குதான் என் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது. என்னுடைய முதல் டெஸ்ட் போட்டியின் இனிமையான நினைவுகள் எப்பொழுதும் என் ஞாபகத்தில் உள்ளது. இன்றும் நன்றாக நடந்ததில் மகிழ்ச்சி.

- Advertisement -

எங்கள் வேகப்பந்து வீச்சு யூனிட் அனுபவம் வாய்ந்த ஒன்று. நாங்கள் போட்டியில் ஒரு தாக்கத்தை உருவாக்க விரும்பினோம். வெளிநாட்டு சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் பொறுமையும் வலிமையோடும் இருக்க வேண்டும். ஒரு செசனில் அது தவறினாலும் நாம் போட்டியை தோற்றுவிடுவோம்.

எனவே போட்டியை வெல்ல நாங்கள் இன்னும் தொடர்ந்து நிறைய பந்து வீச வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இந்தியாவில் சுழற் பந்துவீச்சாளர்கள் நிறைய வேலை செய்கிறார்கள். எங்கள் அணி ஒரு மாற்றத்தை தற்பொழுது சந்தித்து வருகிறது. நிறைய பந்துவீச்சாளர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் செய்தி ஒன்றுதான் வெற்றி பெற கடுமையாக எல்லோரும் போராட வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவது என்பது எப்பொழுதும் சவாலான விஷயம். அந்தச் சவால் இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எங்களால் இந்த சவாலை சமாளித்து வெற்றி பெற முடித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆட்டம் எவ்வளவு வேகமாக முடியும் என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்நாளில் இப்படி ஒரு குறுகிய டெஸ்ட் போட்டியை விளையாடியதும் இல்லை. முதல் நாள் ஆடுகளத்தை பார்த்த பொழுது இப்படி எல்லாம் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.

இந்த ஆடுகளத்தில் முதலில் நாங்களும் பேட்டிங் செய்யவே நினைத்தோம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் எப்பொழுதும் உங்களுக்கு ஆச்சரியங்களை தந்து கொண்டே இருக்கும். கேப் டவுனில் முதல் வெற்றி பெற முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு ஒரு சிறந்த போராட்டமான தொடராக அமைந்தது!” என்று கூறியிருக்கிறார்!