தற்போது உலக கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் அபாயகரமான ஒரு பந்துவீச்சாளராக இந்தியாவின் முகமது சமி திகழ்ந்து வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய அப்ரைட் சீம் பந்துவீச்சுக்கு பயப்படாத பேட்ஸ்மேன்களே இருக்க முடியாது. இந்த காலகட்டம் அவர் தன்னுடைய பந்துவீச்சு பார்மில் உச்சத்தில் இருக்கும் காலகட்டம் என கூறலாம்.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது, கணுக்காலில் காயம் இருந்த போதிலும், இந்திய அணிக்கு அவருடைய தேவை இருந்த காரணத்தினால், காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யாமல், ஊசி மட்டும் போட்டு வலியை பொறுத்துக் கொண்டு தொடர் முழுவதும் விளையாடினார்.
உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் அவர் காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார். அங்கு தொடர்ந்து அவருக்கு நடைபெற்ற சிகிச்சையில் மேற்கொண்டு முன்னேற்றம் எதுவும் கிடைக்காத காரணத்தினால். அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் இங்கிலாந்து வேலைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். தற்பொழுது அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து, இரண்டாவது கட்ட மறுவாழ்வுக்கான காலகட்டத்தில் இருந்து வருகிறார். இவர் காயம் குறித்து பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்ட பொழுது, இவர் ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தன்னுடைய அறுவை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு குறித்து ட்வீட் செய்துள்ள முகமது சமி “அனைவருக்கும் வணக்கம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்னுடைய காயம் குறித்தான முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்பதை பதிவு செய்ய வந்திருக்கிறேன். எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து 15 நாட்கள் ஆகிறது. சமீபத்தில் அறுவை சிகிச்சையில் போடப்பட்ட தையல்கள் அகற்றப்பட்டன. காயத்திலிருந்து நான் அடைந்த முன்னேற்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் குணமாகும் எனது அடுத்த கட்டத்தை எதிர் நோக்குகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : “இது உறுதிங்க.. இந்திய கிரிக்கெட்ல அடுத்த சூப்பர் ஸ்டார் இந்த பையன்தான்” – அஸ்வின் நம்பிக்கை
அவருடைய இந்த ட்வீட்டில் ஒருவர் “சமி பாய் காயத்தால் உலக கோப்பையில் வலியில் இருந்த பொழுது கூட தனது 100 சதவீதத்தை கொடுத்தார். ஆனால் போலியாக ஒரு காயத்தை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக காட்டிய ஒரு பிளேயரும் இருக்க செய்கிறார்” இன்று உலக கோப்பையில் காயம் அடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக கூறி கமெண்ட் செய்திருக்கிறார். ஆனால் முகமது சமி இந்த கமெண்டுக்கு லைக் செய்ய, இது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒருவேளை முகமது சமி, என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று தெரியாமல் லைக் செய்து இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.