பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 29 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தொடர் ஆரம்பித்த வெறும் 5 நாட்களிலேயே பாகிஸ்தான் அணிக்கு ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி படைத்தது. இந்த சூழ்நிலையில் கிட்டத்தட்ட 29 வருடங்களுக்குப் பிறகு ஐசிசி தொடரை நடத்த வாய்ப்பு பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து தற்போது தொடரையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 60 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை தழுவியது.
அதற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை களம் இறங்கிய பாகிஸ்தான் அணி அந்த போட்டியிலும் விராட் கோலியின் அபாரமான சதத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. அப்போதே கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த நிலையில், மற்ற அணிகளின் முடிவை பொறுத்து பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு இருந்தது.
இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வங்கதேச அணியை வீழ்த்தியதோடு பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புக் கனவும் தகர்ந்து போனது. இதனால் தொடர் நடத்தும் பாகிஸ்தான் அணி வெறும் ஐந்து நாட்களிலேயே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு சோகமான நிகழ்வாக அமைந்துள்ளது. மேலும் இந்திய அணி அடுத்த சுற்று முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:100 ரன் அடிச்சது அவங்களுக்கு பிடிக்கல.. அதான் அப்ரிடி விராட் கோலிக்கு இந்த வேலையை செஞ்சார் – சுனில் கவாஸ்கர்
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாகவே ஐசிசி தொடரில் முதல் சுற்றோடு வெளி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் முதல் சுற்றோடு வெளிவந்த பாகிஸ்தான் அணி, அதற்குப் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் முதல் சுற்றோடு வெளிவந்தது. அதற்குப் பின்னர் தற்போது சொந்த நாட்டிலும் நடைபெற்று வரும் ஐசிசி தொடரில் முதல் சுற்றோடு வெளிவந்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.