ஆசியக்கோப்பையில் 37 ரன்களுக்கு தாய்லாந்தை சுருட்டிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி!

0
135
Asiacup2022

பங்களாதேஷில் ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, யுஏஇ, மலேசியா, ஆகிய ஏழு அணிகள் பங்கு பெற்றுள்ளன.

இந்தத் தொடரின் முதல் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அதிலிருந்து இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் முன்னேறும்!

- Advertisement -

இந்திய அணி லீக் சுற்றில் 5 போட்டிகளில் பாகிஸ்தான் அணியுடன் மட்டும் தோல்வி அடைந்திருந்தது. இதன் மூலம் நான்கு போட்டிகளில் வென்ற முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

இன்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி லீக் சுற்றின் தனது கடைசி போட்டியில் தாய்லாந்து அணியோடு மோதி வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்ய வந்த தாய்லாந்து அணிக்கு ஆரம்பத்தில் ஆரம்பித்த அதிர்ச்சி இறுதிவரை நிற்கவே இல்லை. அந்த அணியில் துவக்க வீராங்கனை மட்டுமே தாக்குப் பிடித்து 19 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். மீதி அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். முடிவில் 15.1 ஓவரில் தாய்லாந்து அணி 37 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இந்திய அணி தரப்பில் ராணா 4 ஓவர்கள் பந்துவீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராஜேஸ்வரி மூன்று ஓவர்கள் பந்துவீசி 8 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீப்தி ஷர்மா 4 ஓவர்கள் பந்துவீசி 10 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேக்னா சிங் 2.1 ஓவர்கள் பந்துவீசி 6 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இரண்டு விக்கெட்டுகள் ரன் அவுட் முறையில் வந்தது. இதையடுத்து விளையாடும் இந்திய அணி பவர் பிளே முடிவதற்குள் இந்த ஆட்டத்தை வென்றுவிடும் என்று தெரிகிறது!

இந்தியாவிடம் இவ்வளவு குறைந்த ரன்களில் சுருண்ட தாய்லாந்து அணி, லீக் சுற்றில் பாகிஸ்தானை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது!