“பைனல் கூட்டம் வழியும்.. ஆனா எங்களுக்கு ஆதரவு இருக்காது.. இதை நினைச்சே பார்க்கல!” – ஆஸி கேப்டன் கம்மின்ஸ் பேச்சு!

0
1411
Cummins

ஆஸ்திரேலியா அணி இன்று அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இன்று ஆஸ்திரேலியா அணி மேகமூட்டமாக இருந்த நிலையில் டாசை தோற்றது. ஆனால் அதுவே ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக அமைந்தது.

- Advertisement -

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வது என தவறான முடிவை எடுத்தது. ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் இருவரும் ஜோடி சேர்ந்து தொடர்ச்சியாக 14 ஓவர்கள் வீசி, தென் ஆப்பிரிக்காவின் முதல் நான்கு விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு பறித்தார்கள்.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 48 வது ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தற்பொழுது ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டியில் தொடரை நடத்தும் இந்திய அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது “டக் அவுட்டில் அமர்ந்திருப்பதை விட வெளியே எழுந்து சென்று விடுவது நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இரண்டு மணி நேரங்கள் மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் அதற்கான பலன் கிடைத்ததில் மகிழ்ச்சி.

ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் இருவரும் தொடர்ச்சியாக அவ்வளவு ஓவர்கள் பேசும் அளவுக்கு நிலைமை இருக்கும் என்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து பந்து ஆடுகளத்தில் சுழலப்போகிறது என்று எங்களுக்குத் தெரியும். மேகமூட்டம் இருந்ததால் நாங்கள் முதலில் பந்து வீசியதில் ஏமாற்றம் அடையவில்லை.

நாங்கள் எங்கள் பீல்டிங் குறித்து பேசுகிறோம். ஆரம்பத்தில் அது சரியாக அமையவில்லை. ஆனால் இன்று மிகச் சிறப்பாக இருந்தது. 37 வயதான டேவிட் வார்னர் அபாரமாக செயல்பட்டார்.

முக்கியமான நேரத்தில் ஹெட் கிளாஸன் விக்கெட்டை கைப்பற்றினார். இங்லீஷ் மிகவும் தேவையான நேரத்தில், இரண்டு சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அருமையாக விளையாடி தன்னை நிலை நிறுத்தினார்.

எங்கள் அணியில் சிலர் நாங்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய அனுபவத்தை கொண்டிருக்கிறோம். இறுதிப் போட்டியில் மைதானம் ரசிகர்களால் நிரம்பி இருக்கும். ஆனால் ஆதரவு ஒருதலைப் பட்சமாகத்தான் இருக்கும். 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை எனது கிரிக்கெட் தொழில் வாழ்க்கையில் சிறப்பானது. இந்தியாவில் மற்றொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை!” என்று கூறி இருக்கிறார்!