“உ.கோ-ல் மைதானம் காலியாக இருக்கா? அர்த்தமற்ற பேச்சு” – இந்தியாவுக்கு ஆதரவாக குதித்த பாகிஸ்தான் வீரர்கள்!

0
1451
Akram

இந்த முறை இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முதல் முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கின்ற காரணத்தினால், எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே ரசிகர்களிடையே இருந்து வந்தது.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்த மிகப்பெரிய கிரிக்கெட் தொடரை எப்படி நடத்தும்? ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கான உலகக் கோப்பை என்பதால் ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும்? என்பது குறித்து சந்தேகங்கள் நிலவி வந்தது.

- Advertisement -

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக டிவிட்டரில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஹைதராபாத் மைதானத்தில் இருக்கைகள் மிகவும் அசுத்தமாக இருப்பதை காட்டியிருந்தார். மேலும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இருக்கைகளும் அப்படியே இருப்பதாக நேற்று வீடியோக்கள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவக்க போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் மைதானம் மிகவும் வெறுச்சோடி காணப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் பெரிய வருகை தராதது தெரிந்தது. இங்கிலாந்து எங்கு உலக கோப்பையில் விளையாடினாலும் பார்மி ஆர்மி வரும். இந்த முறை அகமதாபாத் மைதானத்தில் அவர்களையும் காணவில்லை.

- Advertisement -

உலகக் கோப்பைத் தொடர் தவறான நேரத்தில் நடத்தப்படுவதாகவும், கோடைகால பள்ளி கல்லூரி விடுமுறை காலத்தில் நடத்தப்பட்டு இருந்தால் சரியாக இருக்கும் என்றும், ஐபிஎல் தொடரில் லாபம் பார்ப்பதற்காக, ஐசிசி மற்றும் பிசிசிஐ தவறான நேரத்தில் உலகக் கோப்பையை நடத்துவதால்தான் இப்படி நடக்கிறது என்கின்ற குற்றச்சாட்டு இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் வாசிம் அக்ரம் மற்றும் சோயப் மாலிக் இருவரும் இந்தியா கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து வாசிம் அக்ரம் கருத்து தெரிவிக்கும் பொழுது “மைதானம் காலியாக இருக்கிறது என்பது ஒரு அர்த்தமற்ற பேச்சு. நேற்றைய போட்டியில் 40 ஆயிரம் பேர் மைதானத்திற்கு வருகை தந்து இருக்கிறார்கள். ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் அமர்வதற்கான இருக்கை கொண்ட மைதானத்தில், 40 ஆயிரம் பேரை பார்த்தால் குறைவாகத்தான் தெரியும்!” என்று கூறியிருக்கிறார்.

இதே கருத்துக்கு பதில் அளித்து பேசிய சோயப் மாலிக் ” இதே 40,000 ரசிகர்கள் கராச்சி மைதானத்திற்கு வந்திருந்தால் கராச்சி மைதானம் முழுமையாக நிரம்பி இருக்கும். ஏனென்றால் அந்த மைதானத்தில் ரசிகர்களின் கொள்ளளவு அவ்வளவுதான்!” என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஆதரவாக கூறியிருக்கிறார். இவர்கள் இருவரின் கருத்துக்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சிலரின் கேலிகளுக்கு பதிலடியாக அமைந்திருக்கிறது!