“பையன் ரொம்ப டேஞ்சரான ஆளு!” – மும்பை திலக் வர்மாவை புகழும் சிஎஸ்கே வீரர்!

0
724
Tilakvarma

இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கான தயாரிப்புகளில் எல்லா அணிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இந்தத் தோல்வி இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு, இளமையான புதிய இந்திய அணியை அனுப்புவதற்கான முயற்சியில் தீவிரமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கி, அவருக்கு கீழ் பல இளம் வீரர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது!

இந்த வகையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து டி20 போட்டிகள் கொண்ட முதல் போட்டியில், கடந்த இரு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரரான திலக் வர்மாவுக்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியைச் சந்தித்து இருந்தாலும், திலக் வர்மாவின் பேட்டிங் அணுகுமுறை எல்லோரையும் கவரும் படியாக அமைந்திருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளை அனாயசமாக சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு, தன்னுடைய தரம் என்ன என்று காட்டினார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான ராபின் உத்தப்பா கூறும் பொழுது ” அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை இப்படி அதிரடியாக இரண்டு சிக்ஸர்கள் அடித்து துவங்குவார் என்று நாங்கள் எதிர்பார்க்க இல்லை. அந்த கம்பீரமான ஷாட்கள் மற்றும் அந்த பேட்டின் சத்தம், அவர் எவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறார் என்பதை காட்டியது. அவர் தனது தோள்களில் மிக உறுதியான தலையைக் கொண்டு இருக்கிறார். மேலும் அந்த இளைஞர் மிகவும் புத்திசாலித்தனமான வீரர்.

அவர் அதிரடியாக விளையாடி எதிரணியை அழுத்தத்துக்குள் வைக்க விரும்புகிறார். நாங்கள் இதை அவர் செய்வார் என்றும், அவர் எப்படி எதிரணியை அணுகுவார் என்றும் பேசி இருக்கிறோம். நாங்கள் பேசியதை அவர் அப்படியே நேற்றைய ஆட்டத்தில் செய்தார். அதனால் அவர் விளையாடிய விதம் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால் அவர் விளையாடிய விதத்திற்கு அரை சதம் அடித்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!