“ஆல் ரவுண்டர்னு ஏமாத்திக்கிட்டு.. இதே தோனி டீமை பாருங்க” – பத்ரிநாத் உலக கோப்பை இந்திய அணி மீது விமர்சனம்!

0
55979
ICT

இந்தியாவில் இந்த முறை 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. 10 அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதி, அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று, இறுதிப்போட்டி அதிலிருந்து நடத்தப்பட்டு, ஒரு நாள் கிரிக்கெட் உலகச் சாம்பியன் அணி வெளிவருகிறது!

இந்த நிலையில் தற்போது எல்லா அணிகளும் தங்களுடைய உலகக் கோப்பை அணியை அறிவிப்பதற்கான கடைசி நாளாக ஐசிசி இன்றைய நாளை நிர்ணயித்திருந்தது. அதேபோல் இதில் யாருக்காவது காயம் என்றால் 26 ஆம் தேதி வரையில் மாற்றங்களை செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இன்று கடைசி நாள் என்பதால் உலகக் கோப்பைக்கு அணியை அறிவிக்காமல் இருந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தங்களது உலகக்கோப்பை அணியை அறிவித்திருக்கின்றன. இரண்டு அணிகளிலும் பெரிதான மாற்றங்கள் என்று எதுவும் கிடையாது. எல்லாம் எதிர்பார்த்த மாதிரிதான் இருக்கிறது.

இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் ஆல்ரவுண்டர் என்கின்ற அந்தஸ்தில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகிய நான்கு வீரர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

தற்பொழுது இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் சர்துல் தாக்கூர் இடம் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நீங்கள் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் எடுத்துக் கொண்டால், அதில் பேட்டிங் வரிசையில் பந்து வீசக்கூடிய சச்சின், சேவாக், ரெய்னா, யுவராஜ் சிங் யார் என்றாலும், அவர்கள் பந்து வீசாவிட்டாலும் கூட அணியில் பேட்ஸ்மேன்களாக எடுக்கலாம். ஏனென்றால் அவர்கள் ஒரு துறையில் அதாவது பேட்டிங் துறையில் சிறப்பான செயல்பாட்டை கொண்டவர்கள்.

ஒரு அணியை அமைக்கும் பொழுது அதில் ஒருவர் ஒரு துறையில் சிறப்பானவராக இருக்க வேண்டும். இன்னொன்றில் அவர் சிறப்பானவராக இல்லாமல் ஏதாவது கொஞ்சம் பங்களிப்பை கொடுத்தால் கூட போதும். அது அணிக்கு லாபம்.

நீங்கள் தற்போதைய இந்திய அணியை எடுத்துக் கொண்டால் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பானவர். இதே போல ரவீந்திர ஜடேஜாவையும் சொல்லலாம். அக்சர் படேலும் பேட்டிங் நன்றாக செய்யக்கூடியவர். பந்துவீச்சிலும் தாக்கத்தை தருவார்.

ஆனால் இந்த அணியில் சர்துல் தாக்கூரை மட்டும் எடுத்துக் கொண்டால், அவர் பந்துவீச்சாளராகவும் 10 ஓவர்கள் முழுமையாக வீசமாட்டார். அதேபோல் பேட்டிங் என்று எடுத்துக் கொண்டாலும் ஒரு 50 ரன்கள் அடிப்பார் என்று அவரை நீங்கள் நம்ப முடியாது. இது ஆல்ரவுண்டர் என்று ஏமாற்றக்கூடியது. இது சரி வராது. இந்த அணியில் இவரை தேர்ந்தெடுத்து இருக்கக் கூடாது!” என்று கூறியிருக்கிறார்