“என் வாழ்க்கையில இன்னைக்கு நான் அடிச்ச 4 ரன்தான் பெரிய ரன்!” – ஆட்டநாயகன் ஷாம்சி வேடிக்கையான பேச்சு!

0
1460
Shamsi

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் பரபரப்பான கட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா அணி இந்த போட்டியில் எட்டு விக்கெட் இழந்திருந்த பொழுது வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஒன்பது விக்கெட்டுகளை இழந்து ஒரு விக்கெட் கைவசம் இருந்த பொழுது வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரின் ஓவர்களும் 47 வது ஓவருடன் முடிவுக்கு வந்தது. இதை எடுத்து கேப்டன் பாபர் அசாம் முகமது நவாஸை பந்து வீச அழைத்தார்.

ஆட்டத்தின் 48வது ஓவரின் முதல் பந்தில் ஷாம்சி ஒரு ரன் எடுத்து பந்துவீச்சாளர் முனைக்கு சென்றார். இதற்கு அடுத்து தவறாக வெளியில் வீசப்பட்ட பந்தை கேசவ் மகாராஜ் பவுண்டரிக்கு அடித்து, நகம் கடிக்க வைக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் அரையிறுதி வாய்ப்பு மிகவும் பிரகாசமாகி இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.

- Advertisement -

இந்தப் போட்டியில் பதினோராவது பேட்ஸ்மேனாக வந்து முக்கியமான நேரத்தில் நான்கு ரன்கள் எடுத்ததோடு, பந்துவீச்சில் நான்கு விக்கெட் கைப்பற்றி, தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு ஷாம்சி மிக முக்கிய காரணமாக இருந்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறும் பொழுது “நான் என்னுடைய வேலையைச் செய்ய முடியும் என்று தெரியும். ஆனால் எனக்கு முன் வந்தவர்கள் அங்கு தேவையான வேலைகளை செய்து வைத்திருந்தார்கள். இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது.

நாம் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். ஒரு நாளில் விஷயங்கள் நமக்கு சாதகமாக செல்லும், இன்னொரு நாளில் விஷயங்கள் நமக்கு எதிராக செல்லும். விளையாட்டில் இது சகஜமான ஒன்று. நான் இன்று பந்தை காற்றில் அடித்து ஆட்டம் இழந்து இருந்தால், எங்கள் வீரர்கள் என்னை ஓய்வு அறைக்குள் விட்டே இருக்க மாட்டார்கள். இது என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

என் வாழ்க்கையில் நான் அடித்த மிக மதிப்பு மிக்க ரன்கள் இந்த நான்கு ரன்கள் தான். அதேபோல் இந்த ஆண்டு முழுவதும் கேசவ் மகராஜ் அடித்த கண்களில் கடைசியாக அவர் அடித்த நான்கு ரன்கள் தான் மிகவும் முக்கியமானதாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!