“அந்தப் பையன் நல்லா பண்ணக் கூடாது அதான உங்களுக்கு வேணும்” – ரவி சாஸ்திரி பாய்ச்சல்!

0
460
Ravi

இந்திய அணிக்கான கோடைகால கிரிக்கெட்டை கேஎல்.ராகுல் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தவறவிட்டு இருந்தார். ஐபிஎல் தொடர் விளையாடி முடித்துவிட்டு அவர் நேராக வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்து பின்பு ஓய்வில் இருந்தார்.

இந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு பதிலாக இந்திய அணியில் டி20 போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷான், ருதுராஜ், ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் என்று நிறையபேர் விளையாடினார்கள். இந்த முயற்சிகள் எல்லாமே ஒரு தற்காலிகமானதாகவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே இருந்தது.

- Advertisement -

இதற்கடுத்து ஜிம்பாப்வே உடனான ஒருநாள் தொடருக்கு திரும்பிய கேஎல் ராகுல் தனது பழைய பேட்டிங் ரிதத்தை கொண்டுவர ரொம்பவே சிரமப்பட்டார். இது ஆசிய கோப்பையிலும் தொடர்ந்தது. ஆனாலும் ஒரு சில போட்டிகளுக்கு பின்பு சுதாரித்து எழுந்த அவர் ஆப்கானிஸ்தான் உடனான கடைசி போட்டியின் போது அரைசதம் அடித்து மீண்டு வந்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த முதல் டி20 போட்டியில் 35 பந்தில் 55 ரன்கள் குவித்தார்.

நிகழ்வுகள் இவ்வாறு இருக்க, ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியுடனான கடைசி போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு எடுக்க அவருக்கு பதிலாக விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி தனது மூன்று ஆண்டுகால சத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்குவது குறித்து முன்னாள் வீரர்கள் மத்தியில் நிறைய பேச்சுகள் உருவாகியது. இதுசம்பந்தமாக கேஎல் ராகுல் இடமே பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப, ” அப்போது நான் வெளியில் உட்காரவா?” என்று திருப்பி நகைச்சுவையாகக் கேட்டிருந்தார். இந்திய அணியின் மூத்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இந்த பேச்சை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இதற்கு மிகக் கடுமையான முறையில் கருத்தை தெரிவித்து இருக்கிறார். இது சம்பந்தமாக அவர் கூறும் பொழுது ” எனக்கு விராட் கோலி ரோகித் சர்மா ஜோடி துவக்கத்தில் வேண்டாம். கேஎல் ராகுல் ரோஹித் சர்மா ஜோடி தான் வேண்டும். எமர்ஜென்சி அல்லது காயம் ஏற்பட்டால் ஏதாவது இதில் மாற்றம் செய்யலாம். லோயர் மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலிய சூழ்நிலையில் அங்கு ஒரு அனுபவ பேட்ஸ்மேன் தேவை என்று நான் நினைக்கிறேன். ஒரு பந்து வீச்சாளராக நீங்கள் அங்கு மிடில் ஓவர்களில் கூட விக்கெட் பெறுவீர்கள். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸ் இருக்கும். நீங்கள் ஆக்ரோசமாக அப்பொழுது செயல்பட்டு பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்ய முயற்சி செய்வீர்கள். எனவே விராட் கோலியின் அனுபவம் அந்த இடத்தில் மிகவும் முக்கியமானது. அவர் வழக்கம் போல் மூன்றாவது இடத்தில் தான் களமிறங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி
” இது இல்லாமல் கேஎல் ராகுல் தொடக்க வீரராக மிகச்சிறப்பாக அழகாக விளையாடுகிறார். இப்படியிருக்க தேவையில்லாமல் துவக்க ஜோடியை மாற்றுவது குறித்து அலசி, ஏன் அவரின் நம்பிக்கையை மழுங்கடிக்க வேண்டும்? அவர் ஆட்டத்தை துவக்க முடியாமல் போகலாம் என்று ஒரு அவநம்பிக்கை விதையை அவர் மனதில் ஏன் விதைக்க வேண்டும்? அவர் நல்ல முறையில் வந்து நல்ல மனநிலையோடு ரன்கள் குவிக்காமல் போவதைத் தான் நீங்கள் விரும்புகிறீர்களா? இந்தப் பேச்சை விடுவது நல்லது ” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்!