“கில் தான் இந்தியாவோட எதிர்காலம்” 3 வருஷத்துக்கு முன்னாடியே சொன்ன ரோகித் சர்மா – இப்போது வைரலாகும் ட்வீட்!

0
788

3 வருடம் முன்னரே ஷுப்மன் கில் பற்றி ட்வீட் செய்திருக்கிறார் ரோகித் சர்மா. அது இப்போது வைரலாகி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சுப்மன் கில் இளம் வயதிலேயே இந்திய அணிக்காக மூன்றுவித போட்டிகளிலும் இடம் பெற்று விளையாடுகிறார். 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான கில், 2020 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 2023 ஆம் ஆண்டு இலங்கை அணியுடன் நடந்த தொடரில் டி20 போட்டிகளிலும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவானின் இடத்தை நிரப்பி, ஒருநாள் போட்டிகளில் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறார். 19 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ள கில், 5 அரைசதங்கள் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் என 1102 ரன்கள் அடித்திருக்கிறார்.

19 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதிவேகமாக ஆயிரம் ரன்கள் கடந்த இந்திய வீரர்கள் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது வீரர் மற்றும் இளம் வீரர் என்கிற பெருமையும் சாதனையும் பெற்றார்.

இலங்கை தொடருக்கும் முன்பு, இஷான் கிஷன் அல்லது கில், இருவரில் யார் துவக்க வீரராக களம் இறங்குவார்? என்ற விவாதங்கள் நிகழ்ந்தது. அணி நிர்வாகம் கில் மீது நம்பிக்கை வைத்து களமிறக்கியது. அதற்காக பல்வேறு விமர்சனங்களும் வந்தன.

தற்போது சந்தேகத்திற்கு இடம் இன்றி தனது பேட்டிங் மூலம் பலருக்கும் பதில் கொடுத்திருக்கிறார் கில். சர்வதேச போட்டிகளில் நிலையான இடத்தை பெற்றிருக்கும் கில் பற்றி ரோகித் சர்மா இரண்டரை வருடங்களுக்கு முன்பு செய்த ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.

ரோகித் சர்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இரண்டரை வருடங்களுக்கு முன்பு கில் ட்வீட் செய்திருக்கிறார். அதற்கு மறு ட்வீட் செய்த ரோகித் சர்மா, “நன்றி எதிர்காலமே.” என குறிப்பிட்டு இருக்கிறார். அப்போதே சுப்மன் கில் இந்தியாவின் எதிர்காலம் நீதானடா என்று கணித்து சொல்லியிருக்கிறார் என்று இப்போது வைரலாகி வருகிறது.