அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரின் ஏழாவது போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் ஐபிஎல் தொடர் போன்று எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரின் ஏழாவது போட்டியில் மோரிஸ்வில்லே நகரில் பாப் டூ பிளஸ்சிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், ஆண்டர்சன் தலைமையிலான சான் பிரான்சிஸ்கோ யூனிகான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் அணிய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் பேட்டிங் தொடங்கிய யூனிகான் அணி 17.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் அதிரடி இளம் நட்சத்திரம் பிரேசர் மெக்கார்க் 11 ரன்களில் வெளியேறினார். மேத்யூ ஷாட் அதிகபட்சமாக 33 ரன்கள் குவித்தார். பின்னர் டெக்ஸாஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மோஷின் 3.5 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். சியா உல்ஹக் இரண்டு விக்கெட்டுகளும், பிராவோ இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.
மேலும் நவீன் உல்ஹக் ஒருவிக்கட்டும், சான்ட்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கி விளையாடியது. கான்வே மற்றும் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஐந்து ஓவர்களில் 61 ரன்கள் குவித்த நிலையில் அணியின் கேப்டன் டூ பிளஸ்சிஸ் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 34 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
பின்னர் கான்வே 32 ரன்களும் ஹார்டி 34 ரன்கள் குவித்து டெக்சாஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். இதனால் 13 ஓவர்களிலேயே மூன்று விக்கெட் இழப்புக்கு டெக்ஸாஸ் அணி 128 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. டெக்ஸாஸ் அணிக்கு இது முதல் வெற்றியாகும்.
இதையும் படிங்க:அந்த 2 இந்திய ஜாம்பவான்கள் மாதிரி.. சுப்மான் கில்லிடம் இந்தத் திறமை இருக்கு- ஆவேஷ் கான் பேட்டி
ஏற்கனவே ஒரு போட்டி மழையால் டிரா ஆகிய நிலையில் டெக்சாஸ் அணிக்கு இந்த வெற்றி தற்போது அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. நாளை நடைபெற உள்ள போட்டியில் சியாட்டில் ஆர்கஸ் அணியும், வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும் மோத உள்ளன.