இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றிக்குப் பின்னர் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளரான ஆவேஸ் கான் கேப்டன் கில் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணம் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் கில் 49 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 66 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் ருத்ராஜ் 49 ரன்களும், ஜெய்ஸ்வால் 36 ரன்களும் குவித்தனர். கடந்த இரண்டு போட்டிகளில் தடுமாறிய கேப்டன் கில் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்தார்.
இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய ஜிம்பாப்பே அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளும், ஆவேஸ்கான் இரண்டு விக்கெட்டுகளும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்திய ஆவேஷ்கான் போட்டிக்குப் பின்னர் அணியின் கேப்டன்கில் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “இந்தத் தொடரில் எனது செயல்பாடு மகிழ்ச்சியாக உள்ளது. அணியில் நான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறேன். எங்கு பந்து வீச வேண்டும் என்பதில் விருப்பம் இல்லை. ஆனால் எப்போது பந்து வீச அழைத்தாலும் நான் தயாராக இருக்கிறேன். கில் ஒரு பந்துவீச்சாளர்களின் கேப்டன்.
எங்கள் களங்களையும், திட்டங்களையும் அமைக்க பந்துவீச்சாளர்களுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுக்கிறார். இன்று எனது திட்டத்தை செயல்படுத்தி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கும் என்னை ஆதரித்த அவர்தான் முக்கிய காரணம். பிஸ்னோய் பிடித்த அபாரமான கேட்ச் பற்றி கேட்கிறீர்கள். அவர் எப்போதுமே இது போன்ற கேட்ச்களை பிடிக்கக் கூடியவர். ஐபிஎல்லிலும் அவர் இதே போன்ற பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க:210 ரன்.. போராடிய பதான் பிரதர்ஸ்.. கடைசி பந்தில் இந்தியா செமி பைனலுக்கு தகுதி.. சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெளியேற்றம்
இது போன்ற அசாதாரணமான கேட்ச்களை பிடிப்பதற்கு அவர் எப்போதும் விரும்புவார்” என்று கூறி இருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஏற்கனவே பந்துவீச்சாளர்களின் கேப்டன், அவர்கள் பந்துவீச்சாளர்களுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கக் கூடியவர்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஆவேஸ்கானின் இந்த வார்த்தைகள் கேப்டன் கில் எதிர்காலத்தில் இவர்களது வரிசையில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






