இந்திய அணி இரண்டாக உடைந்து விட்டது – முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து

0
241
Indian Cricket Team

இந்திய அணி தற்போது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த தொடருக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். ஆனால் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இதுதான் கேப்டனாக எனது கடைசி தொடர் என்று விராட் அறிவித்துவிட்டார். தனது கடைசி தொடரை வெற்றியுடன் விராட் கோலி முடிப்பார் என்று ரசிகர்கள் பலரும் கருதி வந்த நிலையில், இந்த தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி பெற்றதே கிடையாது என்ற வரலாறுடன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி களம் கண்டது. ஆனால் அந்த ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி பெற்று இந்திய அணி அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. ஒரு பேட்டிங் வீரர் கூட அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்று பலரும் இந்திய அணியை குற்றம்சாட்டினார். இரண்டு ஆட்டங்களிலும் தொடர்ந்து தோல்வி பெற்றதால் அடுத்த 3 ஆட்டத்திலும் நல்ல ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் தற்போது இந்திய அணி உள்ளது.

- Advertisement -

இந்திய அணி நிலைமை இப்படி இருக்க முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் சோயப் அக்தர் தற்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் இந்திய அணி இரண்டாகப் பிரிந்து உள்ளது என்றும் ஒரு குழு விராட் கோலியை ஆதரிப்பதாகவும் மற்றொரு குழு விராட் கோலி தலைமையை எதிர்ப்பதாகவும் தெரிகிறது என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே விராத் மட்டும் ரோகித் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் அக்தர் இவ்வாறு கூறியிருப்பது மிகுந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து அடுத்து வரும் ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி சுற்றுக்கு செல்லுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.