பட்டையைக் கிளப்பிய தமிழக வீரர்கள் ; குஜராத் அணி ரன்கள் குவிப்பு!

0
256
GT

விடுமுறை நாளான இன்று பதினாறாவது ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணி கொல்கத்தா அணிவுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இந்தப் போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடாத காரணத்தால் கேப்டன் பதவியேற்ற ரஷீத் கான் டாசை வென்று பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக வந்த சகா 17 பந்தில் 17 ரன் எடுத்தும், சுப்மன் கில் 31 பந்தில் 39 ரன் எடுத்தும் சுனில் நரைன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்கள். இதற்கடுத்து வந்த அபினவ் மனோகர் 8 பந்தில் 14 ரன்கள் எடுத்து சுயாஸ் சர்மா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஆனால் இன்னொரு முனையில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் தொடர்ந்து இந்த ஆட்டத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தேவையான நேரங்களில் பவுண்டரிக்கு போய், அதே சமயத்தில் சிறப்பாக சிங்கிள் ரொட்டேட் செய்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் கடந்த ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் தனது அரை சதத்தை பதிவு செய்தார். 34 பந்துகளை சந்தித்த மூன்று பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் அரை சதத்தை எட்டினார். இறுதியில் 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சுனில் நரேன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

இறுதிக்கட்டத்தில் தமிழகத்தில் இன்னொரு வீரரான விஜய் சங்கர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் பெர்குசனின் 19 ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியும், சர்துல் தாக்கூர் வீசிய இருபதாவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தும் அசத்தினார். 21 பந்துகளில் அவரது அரை சதம் வந்தது. கடைசி வரை விளையாடிய அவர் 24 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உடன் 63 ரன்கள் குவித்தார். மில்லர் கடைசி நேரத்தில் மூன்று பந்தில் இரண்டு ரன் மட்டும் எடுத்து நின்றார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் குஜராத் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகளை சுனில் நரைன் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் விஜய் சங்கர் 21 பந்தில் அடித்த அரை சதமே குஜராத் அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக அரை சதம் ஆகும். மேலும் இந்தப் போட்டியில் அடிக்கப்பட்ட 204 ரன்களே ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் அதிகபட்ச ரன்கள் ஆகும்.