இந்திய அணி நாளை டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கயானா பிராவிடன்ஸ் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த மைதானம் மற்றும் ஆடுகளத்தின் தன்மை எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இங்கிலாந்து அணியை எடுத்துக்கொண்டால் அவர்களின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் இருவரும் மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல துவக்கம் கிடைத்தால், அதற்கு அடுத்து வரக்கூடியவர்கள் அதை பெரிய அளவில் எடுத்துச் சென்று விடுவார்கள். எனவே அவர்களை ஆரம்பத்திலேயே வெளியேற்ற வேண்டும். பந்துவீச்சில் ஒரே அச்சுறுத்தல் ஆதில் ரஷீத் மட்டுமே.
இந்திய அணியை எடுத்துக் கொண்டால் தற்பொழுது இருக்கும் அணி ஒரு வீரரை சார்ந்த விளையாடாமல், எல்லா வீரர்களும் பங்களிப்பு செய்யும் அணியாக மாறி இருக்கிறது. எனவே இந்திய அணி தனது ஆக்ரோஷமான அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் இருந்தாலே போதுமானது. பந்துவீச்சில் பும்ரா மற்றும் குல்தீப் உலகத்தின் எந்த அணிக்கும் சவால் விடக் கூடியவர்கள்.
போட்டி நடைபெறும் கயானா மைதானத்தை எடுத்துக் கொண்டால் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் அதிக டாட் பந்துகள் விளையாடும் ஆடுகளமாக இருக்கிறது. இங்கு பந்து மெதுவாகவும் சுழன்றும் வரும். எனவே பவர் பிளேவை பயன்படுத்தி புதிய பந்தில் ரன்கள் எடுப்பது இங்கு மிகவும் முக்கியம். எனவே சிறப்பான பந்துவீச்சாளர்களை வைத்து பவர் பிளேவில் ரன் கசியாமல் செய்தால், அடுத்து மிடில் ஓவர்களில் சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து எதிரணியை மடக்கி விடலாம்.
மேலும் கயானா மைதானத்தில் ஆவரேஜ் ஸ்கோர் ஆக 140 இருக்கிறது. எனவே பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி, அதற்கு அடுத்து 15ஆவது ஓவர் வரை மிடில் ஓவர்களில் பொறுமையாக ஆட்டத்தை எடுத்துச் சென்று, கடைசி ஐந்து ஓவர்களுக்கு விக்கட்டை வைத்து அதிரடியாக விளையாடி போட்டியை முடிப்பதுதான் சிறந்த வியூகமாக பேட்டிங்கில் இருக்கிறது.
இதையும் படிங்க : “கொஞ்சமாவது மூளையை பயன்படுத்து”.. இன்சமாம் வைத்த குற்றச்சாட்டுக்கு ரோகித் சர்மா பதிலடி
இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ள 18 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணி 9 முறை, 3 போட்டிகளில் முடிவில்லாமல் போய் இருக்கிறது. மேலும் பகலில் நடைபெறும் பொழுது முதலில் பேட்டிங் செய்வதே சாதகமானதாக இருந்திருக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியா மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வென்று ஒன்றில் தோற்று இருக்கிறது. இங்கிலாந்து இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி ஒரு முடிவில்லாமல் போய் இருக்கிறது. சர்வதேச அளவில் இரண்டு அணிகளும் மோதிக் கொண்ட டி20 போட்டியில் இந்தியா 12 முறையும் இங்கிலாந்து 11 முறையும் வென்றிருக்கிறது. இந்த மைதானத்தின் ஆடுகளத்திற்கு சிறந்த திட்டத்தை இந்தியா கொண்டு வந்தால் நிச்சயம் இங்கிலாந்து அணியை விட முன்னணியில் இருக்கும்!






