வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் முன்னணி ஸ்பின்னர் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய குல்தீப் யாதவ், அடுத்தடுத்த போட்டிகளில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக ஹைதராபாத்தில் நடந்த நான்காவது போட்டியில் இந்திய அணி 247 ரன்களை விட்டுக்கொடுத்து தோல்வியடைந்த நிலையில், குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமப்படும் சூழலில், விக்கெட் டேக்கிங் பவுலரான குல்தீப் யாதவ் அணியில் இல்லாதது இந்திய பவுலிங் லைன் அப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது தொடர் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், பெங்களூருவில் நடக்கவுள்ள கடைசி போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “கூடுதல் பவுன்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு மைதானத்தில், வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் அவருடைய கூக்ளி மற்றும் லெக் ஸ்பின் பந்துகளை கணிக்கவே சிரமப்படுகிறார்கள். அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு எதிராக குல்தீப் யாதவை நீக்குவது கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இல்லாத செயலாகும். இது மிகவும் ஆச்சரியமளிக்கிறது, ஏனெனில் அவர் அணியில் இருந்திருந்தால் நிச்சயம் 15 முதல் 20 ரன்கள் வரை வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இதுபற்றி தொடர்ந்த அவர் “இந்தூர் மைதானம் சிறியது என்பதால் அங்கு குல்தீப் யாதவ் சேர்க்கப்படாத முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் ராஞ்சியில் இந்திய அணி தோற்றதற்கு குல்தீப் யாதவ் தான் காரணம் என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி அவரை நீக்கியிருப்பது முற்றிலும் தவறான விஷயமாகும்” என்று கூறி முடித்துள்ளார்.






