டி20 உலக சாம்பியன் இங்கிலாந்தை மொத்தமாக முடித்துவிட்ட பங்களாதேஷ்!

0
362
Ban vs Eng

இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இரண்டிலும் விளையாட பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என வென்றது. இதற்கு பதிலடியாக பங்களாதேஷ் அணி டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்று அசத்தி இருக்கிறது.

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளை வென்று டி20 தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றி இருந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி மிர்பூர் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டிக்கான தாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிதாய் ஜொலிக்காத பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் இந்த போட்டியில் அதற்கும் சேர்த்து வைத்து ஆரம்பித்தார். மொத்தம் 57 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தத் தொடரில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் நஜ்முல் ஹுசைன் சான்டோ 36 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கட்டுகளை மட்டும் இழந்து 158 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து 159 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய டி20 உலகச் சாம்பியன் இங்கிலாந்து அணியால் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை தாண்டி ரன்கள் கொண்டு வருவது மிகப்பெரிய சிரமமான காரியமாக இருந்தது. துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் தான் சந்தித்த முதல் பந்திலயே ஆட்டம் இழந்தார். ஆனாலும் இன்னொரு முனையில் சிறப்பாக நிலைத்து நின்று விளையாடிய டேவிட் மலான் அரை சதம் அடித்து வெளியேறினார். இவருடன் மூன்றாவது விக்கட்டுக்கு சேர்ந்து விளையாடிய கேப்டன் பட்லர் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர்கள் இருவரும் வெளியேறியதும் இங்கிலாந்து அணியின் வெற்றியும் வெளியேறிவிட்டது!

- Advertisement -

இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்தது. அதேபோல் 15 ஓவர்களில் மூன்று விக்கட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் சேர்த்தது. கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருக்க ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 51 ரன்கள் என்கின்ற எளிய தேவையே இருந்தது. ஆனாலும் பங்களாதேஷ் ஆடுகளத்தில் இந்த ரன்னை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் கொண்டு வரவே முடியவில்லை.

20 ஓவர்கள் நிலைத்து நிற்க முடிந்த இங்கிலாந்து அணியால் ஆறு விக்கட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்தப் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பங்களாதேஷ் அணி வீழ்த்தி இந்தத் தொடரை 3-0 என மொத்தமாக கைப்பற்றி அசத்தியது.

கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியா அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி ஒருநாள் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உள்நாட்டு செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. பெரிய அணிகளாக இருந்தாலும் பங்களாதேஷ் அணியை உள்நாட்டில் வைத்து வெல்வது பெரிய கடினமானதாகவே இருந்து வருகிறது!